×

புதுவை காங். வேட்பாளர் நாளை மறுநாள் அறிவிப்பு

புதுச்சேரி,  மார்ச் 19:   புதுவை காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் ராகுலிடம்  ஒப்படைக்கப்பட்ட நிலையில், நாளை வேட்பாளர் இறுதி செய்யப்பட்டு  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது. தமிழகம், புதுவையில் அடுத்த  மாதம் 18ம்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. திமுக  கூட்டணியில் காங்கிரசுக்கும், அதிமுக கூட்டணியில் என்ஆர் காங்கிரசுக்கும் புதுவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இரு கூட்டணியிலும் நாடாளுமன்ற தொகுதி  வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
 இத்தேர்தலில்  காங்கிரஸ் சார்பில் போட்டியிட புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம்  அக்கட்சி தலைமையிடம் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் ஏற்கனவே ஒருபதவியில்  இருப்பவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என கட்சி தலைமை  கூறியதால் அமைதியாக இருந்தார். இதனால் அவருக்கு அடுத்ததாக மாற்று வேட்பாளர்  பட்டியலில் ஜான்குமார், ஏவி சுப்பிரமணியன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளதாக தகவல் பரவியது.

  இதனிடையே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் வேட்பாளரை இறுதி செய்ய வேண்டிய  நிலைக்கு அக்கட்சி தலைமை தள்ளப்பட்டது. இதையடுத்து காங்., மேலிட  பார்வையாளரான சஞ்சய்தத் புதுச்சேரி வந்து அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன்  தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். பின்னர் சபாநாயகர் வைத்திலிங்கத்தின் வீட்டிற்கு சென்று அவரை சஞ்சய்தத் நேரில் சந்தித்து பேசினார். அதன்பிறகு  முதல்வர் நாராயணசாமி வீட்டில் அமைச்சர்கள் கூடி ஆலோசனையில் ஈடுபட்டனர்.  இதில் கட்சியில் சீனியாரிட்டி, பதவி அனுபவம், வெற்றி வாய்ப்பு, தேர்தல்  செலவினம், கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்பு பணி உள்ளிட்ட பல்வேறு  பிரச்னைகளை கருத்தில் கொண்டு விவாதித்து இறுதியாக வைத்திலிங்கத்தை நிறுத்த  முடிவெடுக்கப்பட்டது.இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களிடமும்  முதல்வர் நாராயணசாமி கருத்து கேட்டுள்ளார். அவர்களும் சபாநாயகரை  நிறுத்துவதற்கு பச்சைக்கொடி காட்டி விட்டதாக தகவல் வெளியாகி வருகிறது.  இதுகுறித்த பட்டியல் கட்சியின் அகில இந்திய தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
  நாளை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் கட்சியின் தேர்தல் உயர்மட்ட  குழு கூடுகிறது. இதில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மட்டுமின்றி  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம்  ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.   இக்கூட்டத்தில் தமிழக, புதுச்சேரி  தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி  செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. வேட்பாளர் பட்டியல்  வெளியானதும், வைத்திலிங்கம் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு  தேர்தல் களத்தில் உடனடியாக இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : announcement ,
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...