×

அதிருப்தியாளர்களை வளைக்கும் காங்கிரஸ்

புதுச்சேரி, மார்ச் 19: புதுவையில் என்ஆர் காங்கிரஸ் அதிருப்தியாளர்களை இழுக்கும் பணியில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனை தடுக்கும் முயற்சியில் என்ஆர் காங்கிரஸ் இறங்கியுள்ளது.புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகர் வைத்திலிங்கத்தை களமிறக்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அகில இந்திய காங்., தலைமையின் தேர்வு கமிட்டி கூட்டத்தில், விவாதிக்கப்பட்டு ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகவுள்ளது. அதேபோல் என்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் டாக்டர் நாராயணசாமியை வேட்பாளராக களமிறக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆனால் கட்சி தலைவர் ரங்கசாமி இதனை அதிகாரப்பூர்வமாக இன்னமும் அறிவிக்கவில்லை.ஏனெனில் காங்கிரஸ் வேட்பாளரை பொறுத்து, தங்கள் வேட்பாளரை களமிறக்கும் எண்ணத்தில் ரங்கசாமி இருப்பதால் அவர் மவுனம் காப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே தொகுதி வாரியாக களநிலவரத்தை காங்கிரஸ் கட்சி ஆய்வு செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தும் வகையில் மாற்று கட்சி பிரமுகர்களை வளைக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.

குறிப்பாக என்ஆர் காங்கிரஸ், பாஜகவில் உள்ள முக்கிய பிரமுகர்களை காங்கிரஸ் கட்சிக்குள் இழுத்து வருகின்றனர். கடந்த என்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் சேர்மனாக இருந்தவர்கள், சீட்டு கேட்டு கிடைக்காதவர்கள், அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏக்கள் ஆகியோரிடம்  காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதன்படி  மணவெளி தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சுரேஷ், நெட்டப்பாக்கத்தை சேர்ந்த முன்னாள் சேர்மன் பிரசாந்தகுமார் ஆகியோர் முதல்வர் நாராயணசாமி முன்னிலையில் கடந்த  சில நாட்களுக்கு முன் காங்கிரசில் இணைந்தனர்.அதேபோல் ரங்கசாமி மீது அதிருப்தியடைந்து கடந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட கல்யாணசுந்தரம், வைத்தியநாதன் மற்றும் ஊசுடு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சாய்.சரவணகுமார் ஆகியோரிடம் காங்கிரஸ் கட்சி ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது. இதனை மோப்பம் பிடித்த என்ஆர் காங்கிரஸ், காங்கிரசின் முயற்சியை தடுத்து, அதிருப்தியாளர்களிடம் சமரசம் பேசி வருகிறது.

அப்போது அரசியல் எதிர்காலம் கருதி, அதிருப்தியை மறந்துவிட்டு, என்ஆர் காங்கிரசுடன் மீண்டும் இணைந்து செயல்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு, என்ஆர் காங்கிரசை ஆதரிக்க வேண்டுமென வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.இது குறித்து முன்னாள் எம்எல்ஏ ஒருவரிடம் கேட்டபோது, இரண்டு கட்சிகள் தரப்பிலிருந்தும் என்னிடம் பேசினர். நான் எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. என் தொகுதி  மக்களுக்கு எது நல்லது என்பதை பொறுத்துதான் என்னுடைய முடிவு இருக்கும். நாளை மறுதினம் தொகுதி கூட்டத்தை கூட்டி மக்களின் கருத்துக்களை கேட்க இருக்கிறேன். அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதனை பொறுத்து ஆதரவு இருக்கும் என்றார்.

Tags : Congress ,dissidents ,
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...