×

ெபாள்ளாச்சி பலாத்கார சம்பவத்தை கண்டித்து மாணவர்கள், வக்கீல்கள் போராட்டம்

வேலூர், மார்ச் 15: பொள்ளாச்சி பலாத்கார சம்பவத்தை கண்டித்து மாணவர்கள், வக்கீல்கள் வேலூரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்த்குமார் ஆகிய 4 பேரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இதில் குற்றவாளிகளை ஆளும் கட்சியினர் காப்பாற்ற முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பலருக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் அவர்களை கைது செய்வதில் போலீசார் அலட்சியம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே இதை கண்டித்து பல்வேறு அமைப்பினர், மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேலூர் ஊரிசு கல்லூரியில் மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதுபோல் வேலூர் சத்துவாச்சாரி கோர்ட்டில் வழக்கறிஞர்கள் நேற்று பணிகளை புறக்கணித்தனர். கோர்ட் எதிரே சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை வழங்க வேண்டும். போலீசார் முறையாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதில் பெண் வழக்கறிஞர்கள் பார் அசோசியேஷன் தலைவர் காஞ்சனா, பார் அசோசியேஷன் செயலாளர் கலைச்செல்வன், வேலூர் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். தகவலறிந்த சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஏஐடியுசி, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைப்பாளர் சரோஜா தலைமை தாங்கினார். ஏஐடியுசி மாவட்ட செயலாளர் சிம்புதேவன், மாவட்ட பொருளாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் தேவதாஸ், மாவட்ட தலைவர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : lawyers ,rape incident ,Pallachchi ,
× RELATED திண்டிவனத்தில் தேனீக்கள் கொட்டியதில்...