கள்ளிக்குப்பம் மேற்கு பாலாஜி நகரில் மேற்கூரை இல்லாத பஸ் நிழற்குடை: பயணிகள் தவிப்பு

அம்பத்தூர்: கள்ளிக்குப்பம் மேற்கு பாலாஜி நகர் பஸ் நிறுத்த நிழற்குடையில் உடைந்த மேற்கூரையை அதிகாரிகள் சீரமைக்காததால் பயணிகள் வெயில், மழையில் அவதிக்குள்ளாகின்றனர்.  அம்பத்தூர் - செங்குன்றம் நெடுஞ்சாலையில் கள்ளிகுப்பம் மேற்கு பாலாஜி நகர் பஸ் நிறுத்தம் உள்ளது. சுற்றுப் பகுதிகளான சக்தி நகர், கிழக்கு பானு நகர், திருமலை பிரியா நகர், ராஜிவ்காந்தி நகர், திருத்தணி நகர், இந்திரா நகர்,  வ.உ.சி நகர் உள்ளிட்ட பகுதி மக்கள் இந்த பேருந்து நிறுத்தம் வந்து, பஸ் பிடித்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இவர்களின் வசதிக்காக மாநகராட்சி நிர்வாகம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இந்த நிறுத்தத்தில் இருக்கை, மின் விளக்கு வசதிகளுடன் நவீன நிழற்குடை அமைத்தது. ஆனால், முறையாக பராமரிக்காததால் தற்போது மின்விளக்கு  உடைந்து இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேற்கூரை உடைந்துள்ளதால், வானமே கூரையாக உள்ளது. இதனால், வெயில், மழைக் காலங்களில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட நிழற்குடையை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நிழற்குடையின் மின் விளக்கு  உடைந்துள்ளதால் இரவில் பெண் பயணிகள் அச்சத்துடன் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. இதை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் பயணிகளிடம் செல்போன், செயின் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கூரை உடைந்துள்ளதால் வெயில், மழை காலங்களில் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். போஸ்டர்கள் ஒட்டப்பட்டு  அலங்கோலமாக காட்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி நிழற்குடையை ஆக்கிரமித்து டிபன் கடை வைக்கப்பட்டுள்ளதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதுபற்றி மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால்  நிழற்குடை இருந்தும் பயணிகளுக்கு எந்த பயனும் இல்லாமல் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

× RELATED கள்ளிக்குப்பம் மேற்கு பாலாஜி நகரில்...