20 ஆண்டுகளாக கைவிடப்பட்டகொத்தமல்லி சாகுபடி செய்யும் விவசாயிகள் எண்ணிக்கை குறைவு இளம் தலைமுறைக்கு தெரியாமல் போய்விடும் நிலை

பாடாலூர், பிப். 15: இருபது ஆண்டுகளாக கைவிடப்பட்ட கொத்தமல்லி சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால், இளம் தலைமுறைக்கு தெரியாமல் போய்விடும் நிலை உருவாகியுள்ளது.பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஆலத்தூர் தாலுகா பகுதியில் வானம் பார்த்த பூமியாக உள்ள  மானாவாரி நிலங்களே அதிக அளவில் உள்ளது. குறிப்பாகஆலத்தூர்  தாலுக்காவின் கிழக்குப்பகுதியில் உள்ள கொளக்காநத்தம், கொட்டரை, கூடலூர், இலுப்பைக்குடி, அயினாபுரம், அணைப்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் உள்ள அனைத்து நிலங்களும்  மானாவாரி விவசாய நிலங்களே  அதிகளவில் உள்ளன. ஆலத்தூர் தாலுகாவில் மேற்கு பகுதியில்  உள்ள  பாடாலூர் செட்டிகுளம், இரூர், நாட்டார்மங்கலம், நக்கசேலம், அடைக்கம்பட்டி, தேனூர், கண்ணப்பாடி, மாவலிங்கை  உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட கிணற்று பாசன நிலங்கள் உள்ளன.  மற்ற  நிலங்கள் மானாவாரி விவசாய நிலங்களாகவே உள்ளன. கிணற்று  பாசனம் இருந்தாலும் வானம் மழை பொழிந்தால் மட்டுமே அந்த கிணற்றில் நீர் ஊற்று பிடித்து விவசாயம்  செய்ய முடியும் என்ற நிலைமையில் தான் விவசாயிகள் உள்ளனர்.  

இதுபோல் உள்ள  மானாவாரி நிலங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை சமையலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கொத்தமல்லி, மிளகாய், நிலக்கடலை, தட்டைப்பயிறு, பாசிப்பயிறு, மொச்சை,  வரகு, சோளம், கொண்டைக்கடலை போன்ற மானாவாரி விவசாய பயிர்களே சாகுபடி செய்து வந்தனர், இதில் முக்கியமாக கொத்தமல்லி அதிகளவில்  பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து வந்தனர். ஏனென்றால் இந்தப் பயிர் மிகவும் வறட்சியைத் தாங்கி வளரும் விவசாய பயிராகும். மழையில்லாத காலங்களில் அதிகப்படியாக கொத்தமல்லி விதைப்பு செய்து வந்தனர். விதைப்பு  முடிந்தவுடன் குறைந்தளவு மழை பெய்தாலே கொத்தமல்லி விளைச்சலை பெற்று விடும்.

மேலும் அதற்கான செலவு மற்றும் பராமரிப்பும் மிகவும் குறைவாகவே இருந்தது. நிலத்தை உழுது எருவிட்டு விதைப்பு செய்தாலே போதுமானது. பெரிய அளவில் உரம், பூச்சி மருந்து தெளித்தல் என்று எவ்வித செலவுகளும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலும் கிணற்று பாசன விவசாய நிலங்களிலும் மழை குறைவாக உள்ள ஆண்டுகளில் கொத்தமல்லி விதைப்பு செய்து வந்தனர் விவசாயிகள். சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் நிலங்களிலும் கொத்தமல்லியை ஊடுபயிராக சாகுபடி செய்து அறுவடை செய்தனர். சமையலில் மிகவும் முக்கியமான பொருளாக கொத்தமல்லி விளங்கி வருகிறது. தலையாக உள்ள போது சாம்பார், ரசம், பொறியல், உள்ளிட்ட பல்வேறு உணவிற்கும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் துவையல் செய்து சாப்பிட்டு வருகின்றனர். இதனையடுத்து கொத்தமல்லி தூளாக  அரைக்கப்பட்டு சைவம் மற்றும் அசைவம் உள்ளிட்ட  அனைத்து வகையான உணவு வகைகளுக்கும் நறுமண பொருளாக பயன்படுத்தப் படுகிறது.

இதுபோல் சமையலின் பல்வேறு பயன்பாட்டுக்கும் மிகவும் முக்கியமாக இருந்து வரும் நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிக அளவிலான மானாவாரி விவசாய நிலங்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில்  சாகுபடி செய்து வந்த கொத்தமல்லியை கடந்த 20 ஆண்டுகளாக சாகுபடி செய்வதை விவசாயிகள் கைவிட்டனர். ஆனால் சில விவசாயிகள் மட்டும் நாற்றங்கால் முறையில் கொத்தமல்லி தெளித்து  அதனை விளைச்சலுக்கு விடாமல் கொத்தமல்லி தலையாக  பிடுங்கி ஒரு கட்டு ரூ. 10, ரூ.20 என்ற விலையில் விற்பனை செய்து வந்தனர்.  இதுபோல் சமையலில் முக்கிய பொருளாக கருதப்படும் கொத்தமல்லி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பணப்பயிர் என விவசாயிகள் இடையே  அறிமுகமான பருத்தி மற்றும் மக்காச்சோளம் பயிர்களின்  வரவால் பின்னுக்கு தள்ளப்பட்டு  படிப்படியாக விவசாயிகளால் கைவிடப்பட்டு முற்றிலும் சாகுபடி விடப்பட்டது.   
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கிராமத்திற்கு ஓரிரு விவசாயிகள் மட்டுமே கொத்தமல்லி சாகுபடி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.   இதனால் இன்றைய இளம் தலைமுறையினருக்கு கொத்தமல்லி சாகுபடி எவ்வாறு செய்வது என்பது தெரியாமல் போய் விடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

× RELATED தேர்தலுக்கு பிந்தைய...