மாணவர்களுக்கு கராத்தே சீருடை

ஊட்டி, பிப். 15: ஊட்டியில் உள்ள ஆர்.கே.புரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசுப்பள்ளிகள் தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையாக செயல்பட்டு வருகின்றன. சில ஆசிரியர், ஆசிரியைகளின் முயற்சியால் அந்தப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சிறந்த சீருடைகள், ஸ்வெட்டர், டிராக் சூட் போன்றவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், சில பள்ளிகளில் பல்வேறு விளையாட்டுக்களிலும் மாணவர்களை ஊக்குவித்து, அவர்களை மாநில அளவிலான போட்டிகளுக்கு அழைத்துச் சென்று வெற்றி பெற்று வருகின்றனர். இது போன்ற பள்ளிகளில் ஊட்டியில் உள்ள ஆர்.கே.புரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியும் ஒன்று.
இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் முயற்சியால், மாணவர்கள் சிலர் அறிவியல் கண்காட்சியின் போது தேசிய அளவில் பங்கேற்று பரிசுகளையும் பெற்றுச்சென்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தற்போது கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கராத்தே பயிற்சி பெறும் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது.
இதில், பள்ளி தலைமை ஆசிரியர் பிரமீளா தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியின் போது, ஊட்டி அரிமா சங்க தலைவர் சுரேஷ், செயலாளர் மணிவண்ணன், முன்னாள் தலைவர்கள் ரவி, சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கராத்தே ஆடைகளை இலவசமாக மாணவர்களுக்கு வழங்கினர்.

× RELATED மாணவ,மாணவிகளை அங்கீகாரமற்ற பள்ளியில் சேர்க்க கூடாது