ரத்த தான முகாம்

ஊட்டி, பிப். 15: கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், கூடலூர் அரசு மருத்துவமனை, நெலக்கோட்டை சமுதாய சுகாதார நிலையம் ஆகியவை சார்பில் கோழிப்பாலம் பகுதியில் ரத்த தான முகாம் நேற்று நடந்தது. இதில் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் மகேஸ்வரன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சுரேஷ் தலைமை வகித்தார்.
இதுகுறித்து ரத்தவங்கி மருத்துவ அலுவலர் மயில்சாமி கூறுகையில்: ‘18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ரத்ததானம் செய்யலாம். மது அருந்தினால் 24 மணி நேரம் ரத்தம் வழங்க முடியாது,’ என்றார்.
இதில் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 22 பேர் ரத்த தானம் செய்தனர். பின் முகாமில் சேகரிக்கப்பட்ட ரத்தம் கூடலூர் ரத்த வங்கிக்கு எடுத்து செல்லப்பட்டது.
பிரிவு 17நிலம் தொடர்பான கூட்டம் புறக்கணிப்பு
கூடலூர், பிப்.15: கூடலூர் பந்தலூர் தாலுகா பகுதிகளில் விவசாயிகள் பொதுமக்கள் வசிக்கும் பிரிவு 17 நிலப்பிரச்னை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அனைத்து அரசியல் பொது நல அமைப்புகள் அடங்கிய விளக்ககூட்டம் கூடலூர் ஊரட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் இன்னொசன்ட் திவ்யா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகள் பொது நல அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: ‘‘பிரிவு 17 நிலம் குறித்து அரசு எடுத்துவரும் நாவடிக்கைகள் குறித்தும் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.  அவ்வாறு  தவறான தகவல் அளிப்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட அரசியல் கட்சியினர் பேசுகையில்: ‘‘பிரிவு 17 நிலங்களில் வசிப்பவர்களுக்கு நில வெளியேற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்றனர்.
அதற்கு மாவட்ட ஆட்சியர் அளித்த பதிலில் முரண்பாடு உள்ளதாக கூறி  அரசியல் கட்சியினர் கூட்டத்தை புறக்கணித்தனர். இதனால் கூட்டம் பாதியில் முடிந்தது.
மாவட்ட ஆட்சியரே தங்களை விளக்க கூட்டத்திற்கு அழைத்து விட்டு அவமதிக்கும் வகையிலும் நடந்து கொண்டதாகவும், பொது மக்களின் பிரச்னை குறித்த கேள்விகளுக்கு உரிய  விளக்கம் தர மறுப்பதாகவும் அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டினர். மேலும் பிரிவு17 நிலங்களை வனமாக அறிவிக்கை மக்களை நில வெளியேற்றம் செய்யும் நடவடிக்கை உள்ளதாக மக்கள் அச்சத்தில் உள்ளதால் அதற்கும் முறையாக பதில் அளிக்காமல் உள்ளனர் என அனைத்து கட்சியினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
 இதனால் அரசியல் கட்சியினர் மற்றும் பொது நல அமைப்பு கள் சார்பில் மீண்டும் போராட்ட நடந்த போவதாக அரசியல் கட்சியினர் கூறினர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் பிரச்னைக்கு முடிவு காணும் வகையில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக இந்த நிலங்களில் வசிக்கும் ஆதிவாசி குடியிருப்புகளுக்கு சாலை மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. பல வருடங்களுக்கு பின்னர் இந்த நிலப்பிரச்னை தீர்க்க  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 இந்த நிலங்களில் வசிக்கும் யாரையும் நில வெளியேற்றம் செய்யும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக மக்களின் பிரச்னைகளை தீர்க்கவே  அரசும் மாவட்ட நிர்வாகமும் செயலில் ஈடுபட்டு வருகிறது. எனவே பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது. இது குறித்து இப்பகுதி மக்கள் மத்தியில் அரசு சார்பில் விழிப்புனர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

× RELATED சங்கரன்கோவிலில் ரத்த தான முகாம்