வேலூர் ரவுடி ஓட, ஓட விரட்டி வெட்டி படுகொலை கோஷ்டி மோதலில் நடந்ததா? போலீசார் விசாரணை ஆற்காடு அருகே பயங்கரம்

ஆற்காடு, பிப். 14: ஆற்காடு அருகே வேலூரை சேர்ந்த பிரபல ரவுடி ஓடஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோஷ்டி மோதலில் அவர் கொல்லப்பட்டாரா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள விவசாய நிலத்தில் நேற்று காலை பலத்த வெட்டுக்காயங்களுடன் ஆண் சடலம் கிடந்தது. இதைப் பார்த்த அவ்வழியாக சென்ற மக்கள், ரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி சம்பவ இடத்திற்கு சென்று விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.அதில், கொலையான வாலிபர், வேலூர் சைதாப்பேட்டை கன்னிக்கோயில் தெருவை சேர்ந்த தமிழரசன்(26) என்பது தெரியவந்தது. கழுத்து, மார்பு உட்பட பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. எனவே, இவரை மர்மநபர்கள் பாட்டிலால் கழுத்தறுத்தும், வெட்டியும் படுகொலை செய்திருப்பது தெரியவந்தது.

தகவலறிந்த டிஎஸ்பி கலைச்செல்வம் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் வேலூரில் இருந்து கைரேகை நிபுணர் விஜய் உள்ளிட்டோர் ரேகைகளை பதிவு செய்தனர். மேலும், தமிழரசன் சடலம் கிடந்த நிலத்திற்கு பக்கத்தில் உள்ள சர்வீஸ் ரோட்டில் உடைந்துபோன பாட்டில்களும் ரத்த துளிகளும் இருந்தன.மேலும், சடலம் கிடந்த இடத்திற்கு எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதியின் மற்றொரு புறமும் ரத்தக்கறை இருந்தது. எனவே இவரை கொலையாளிகள் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.வேலூரில் இருந்து மோப்பநாய் சிம்பா வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தவாறு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள எம்ஜிஆர் நகர் சுடுகாடு அருகே வரை சென்று நின்றுவிட்டது. அந்த இடத்தில் சிலர் அமர்ந்து மது அருந்தியதற்கான அடையாளம் இருந்தது. இதனையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ைவத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தமிழரசன் மீது வேலூர் வடக்கு உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, பெண் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. தமிழரசன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது குடிபோதையில் வந்த சிலர், தமிழரசனிடம் தகராறு செய்தார்களாம். சிறிது நேரம் கழித்து தமிழரசன் வெளியே சென்றுவருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் வரவில்லை.கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்துவாச்சாரி காங்கேயநல்லூர் பாலாற்று பகுதியில் முகம் சிதைக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட பிச்சை பெருமாளின் உறவினர் மகன் தான் தமிழரசன் என்பதும் தெரியவந்தது.மேலும், சத்துவாச்சாரியை சேர்ந்த பிரபல ரவுடி வீச்சுதினேஷ் கும்பலுக்கும், தமிழரசனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த முன்விரோத தகராறில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

× RELATED கோஷ்டி மோதலில் ஓட்டலுக்கு தீ வைப்பு