×

பெரியார் பஸ் ஸ்டாண்ட்டை நவீனமாக்கும் பணிகள் காலதாமதம் பஸ்கள் நிறுத்தும் இடம் தேர்வில் மாநகராட்சி திணறல்

மதுரை, ஜன.23 : மதுரை மாநகராட்சி மந்தமான செயல்பாட்டால் பெரியார் பஸ்ஸ்டாண்ட் நவீனமாக்கும் பணிகள் துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் டவுன் பஸ்கள் நிறுத்தும் இடம் தேர்வு செய்வதிலும் மாநகராட்சி திணறி வருகிறது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை பெரியார், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், திருவள்ளுவர்  பஸ்ஸ்டாண்டுகளை ஒருங்கிணைத்து ரூ.159 கோடியில் நவீனப்படுத்தப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோயிலை மையமாக வைத்து சுற்றிலும் 1,300 ஏக்கர் பரப்பளவிலான இடங்களை நவீனமயமாக்கும் பணிக்கான ஏற்பாடுகள் கடந்த 4 மாதம் முன்பே துவங்கின. மாதிரி வரைபடங்களும் வரையப்பட்டு மாநகராட்சி தயார் நிலையில் இருந்தது.
ஆனால் பஸ்ஸ்டாண்டிற்குள் இருந்த கடைகளை அகற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி துரிதமாக செயல்படவில்லை. உள்ளே இருந்த 446 கடை உரிமையாளர்களும் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் வழக்கு தொடர்வதற்கு முன்பே மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக முடித்திருக்க வேண்டும். கடைகளை காலி செய்யும் விசயத்தில் மாநகராட்சி மந்தமாக நடந்து கொண்டது.
பெரியார் பஸ் ஸ்டாண்டை மூடினால் அரசு டவுன் பஸ்களை நிறுத்த மாற்று இடம் தேவை. அந்த இடத்தை முன்கூட்டியே திட்டமிட்டு தேர்வு செய்திருக்க வேண்டும். அதையும் மாநகராட்சி செய்யாமல் மந்தகதியாக நடந்து கொண்டது. இந்நிலையில் ஜனவரி 19ல் பெரியார் பஸ்ஸ்டாண்ட் நவீனமயமாக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடத்தப்பட்டது. ஆனாலும் டவுன் பஸ்களை நிறுத்துவதற்குரிய 3 இடங்கள் சிக்கலில் உள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்துத்துறை, மாநகராட்சி மற்றும் போக்குவரத்து போலீசார் கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். பஸ்கள் நிறுத்தும் இடங்கள் குறித்த பட்டியல் இன்று முடிவு செய்யப்படும் என தெரிகிறது. மாநகராட்சியின் ஆமைவேக செயல்பாட்டால் பெரியார் பஸ்ஸ்டாண்ட் நவீனமயமாக்கும் பணி காலதாமதமாக துவங்க வேண்டிய கட்டாய நிலை எழுந்துள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.
 ஸ்மார்ட் சிட்டி திட்ட மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கடைகள் முழு அளவில் காலி செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. அனைத்து கடைகளும் காலி செய்தால் மட்டுமே நவீனமாக்கும் பணிகளை துவக்க முடியும். அதுவரை பஸ்கள் உள்ளே வந்து செல்கின்றன. டவுன் பஸ்கள் நிறுத்த மாற்று இடங்கள் தேர்வு செய்த பின்னரே பணிகளை துவங்க முடியும் என கருதுகிறோம். அனைத்தும் ஒரு நேரத்தில் பிரச்னையாக வந்து நிற்கிறது. இவற்றை தீர்த்துவிட்டு நவீனமாக்கும் பணிகளை விரைவில் துவங்க முடிவு செய்திருக்கிறோம்’’ என்றார்.  

Tags : Periyar Bus Stand Modern Bus Terminal ,
× RELATED மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட்...