×

மின்வாரியத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி

ஈரோடு, ஜன.22: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவரது மகன் ஆறுமுகம் (48). இவர் நேற்று ஈரோடு மாவட்ட எஸ்பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: நான் வெள்ளக்கோவில் காமராஜபுரத்தில் கோழிக்கடை நடத்தி வருகிறேன். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு நஞ்சைஊத்துக்குளி தம்பிரான்வலசு பகுதியைச் சேர்ந்த சூரியா என்ற பெண் அறிமுகமானார். அவர் ஈரோடு வெண்டிபாளையம் கதவணையில் பணியாற்றி வரும் பார்த்தசாரதி என்பவரை அறிமுகப்படுத்தினார். அவர் ஆளும்கட்சியினர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் தனக்கு தெரியும் என்றும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கமர்சியல் அசிஸ்டெண்ட் பணியிடம் நிரப்பப்படவுள்ளதாகவும், அதற்கு 5 லட்சம் ரூபாய் செலவாகும் என பார்த்தசாரதி கூறினார்.

இதை நம்பி கடந்த 2017ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி வெண்டிபாளையம் மின்சார அலுவலகத்தில் வைத்து 3 லட்சம் ரூபாய் கொடுத்தேன். அதற்கு பிறகு இரண்டு மாதம் கழித்து ஒரு லட்ச ரூபாயும், பிறகு பார்த்தசாரதி என்பவர் கூறியபடி வேல்முருகன் என்பவரின் வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் ரூபாயும் என 5 லட்சம் ரூபாய் கொடுத்தேன். அதற்கு பிறகு பணிக்கான ஆர்டர் இன்னும் வரவில்லையே என பார்த்தசாரதியிடம் கேட்டபோது கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி எனக்கு ஒரு பணி நியமன கடிதத்தை கொடுத்தார். அந்த கடிதம் தொடர்பாக விசாரித்தபோது அதுபோலியானது என தெரியவந்தது. இதனால் நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். பணத்தை தர மறுத்ததுடன் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி என்னிடம் மோசடி செய்த பார்த்தசாரதி மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

Tags : employer ,
× RELATED முதலாளி ரூ.2 லட்சம் தராததால் டிரைவரை கடத்தி சரமாரி தாக்குதல்