மாட்டு வண்டி தொழிலாளர்கள் திடீர் மறியல்

பாகூர், ஜன. 22: கடலூர்- புதுச்சேரி சாலையில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக 111 பேரை போலீசார் கைது செய்தனர்.பாகூர் அடுத்த கன்னியக்கோயிலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாட்டு வண்டி தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி பிரதேச மாட்டு வண்டி தொழிலாளர் சங்க செயலாளர் சிவானந்தம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் செல்வராஜ், கலியமூர்த்தி, ஹரிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளுடன் தொழிலாளர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும். மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அரசு மணல் குவாரி அமைத்து கொடுக்க வேண்டும். சிறை வைக்கப்பட்டுள்ள மாட்டு வண்டிகளை நிபந்தனை, அபராதம் ஏதுமின்றி உடனடியாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மாடுகளையும் தொழிலாளர்களையும் பாதுகாக்க மாதம் ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதனால் கடலூர்- புதுச்சேரி சாலையில் இரண்டு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இன்ஸ்பெக்டர்கள் கவுதம் சிவகணேஷ் (பாகூர்), பாபுஜி (முதலியார்பேட்டை) ஆகியோர் மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருப்பினும் மறியலை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 111 தொழிலாளர்களை கைது செய்து கிருமாம்பாக்கம் காவல் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் 50 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். மறியல் போராட்டம் காரணமாக கடலூர்- புதுச்சேரி சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
× RELATED நெல்லை அருகே ஜனநாயக வாலிபர் சங்க...