×

தீவிர அரசியலில் குதிக்க கண்ணன் முடிவு

புதுச்சேரி,  ஜன. 11:  புதுவை ராஜ்யசபா  எம்பியாக இருந்தவர் கண்ணன். காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில்  இருந்தவர். மேலும் தனியாகவும் கட்சி தொடங்கி நடத்தினார். இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் ராஜ்பவன் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கி தோல்வியடைந்தார். அதன்பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர்,  கடந்தாண்டு இறுதியில் மீண்டும் தனது அரசியல் பயணத்தை தீவிரப்படுத்த உள்ளதாக  அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த நிலையில் கண்ணனின் புதிய கட்சிப்  பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் ஆணையத்தில் இதுதொடர்பான பணிகள்  முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில், தை முதல் வாரத்தில் இருந்து தனது  அரசியல் களப்பணியை தீவிரப்படுத்த கண்ணன் திட்டமிட்டுள்ளார்.

 அடுத்த சட்டமன்ற தேர்தலில் களமிறங்க திட்ட மிட்டுள்ள கண்ணன்,  தனது செல்வாக்கை அறிந்து கொள்வதற்கு, ஆயத்த களமாக வரவுள்ள பாராளுமன்ற  தேர்தலை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளார். இதன் காரணமாக அவர் எம்பி தேர்தலில் தனது கட்சி வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாகவோ  அல்லது மாற்றுக் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பது பற்றியோ எந்த முடிவும்  இதுவரை எடுக்கவில்லை.  ஒவ்வொரு கட்சியும் நிறுத்தும் வேட்பாளர்களை பொறுத்து, கண்ணன்  கடைசி நேரத்தில் இறுதி முடிவை அறிவிக்க உள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 தனது செல்வாக்கை பாராளுமன்ற  தேர்தலில் அறிந்த பிறகே அடுத்தகட்ட நகர்வுக்கு செல்லும் முடிவில் கண்ணன்  இருக்கிறார். சமீபத்தில் அவர்,  கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதாக ஒரு  தகவல் வெளியானது. ஆனால் இதனையும் அவரது தரப்பில் மறுத்துள்ளனர்.  இது குறித்து அவரது ஆதரவாளர்களிடம் கேட்டபோது, பாராளுமன்ற தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் மற்றும் அப்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப எங்களின் முடிவு இருக்கும். கண்டிப்பாக பாராளுமன்ற தேர்தலில் எங்களுடைய பங்களிப்பு நிச்சயமாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

Tags : Kannan ,
× RELATED மணப்பாறை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு..!!