×

டெல்லியில் நடைபெறும் கலா உத்சவ் போட்டியில் புதுவை மாணவர்கள் பங்கேற்பு

புதுச்சேரி, டிச. 12: புதுச்சேரி பள்ளிக்கல்வி இயக்ககத்தின் சமக்ர சிக்சா திட்ட இயக்குநர் மொகிந்தர் பால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இடைநிலைக்கல்வி பயிலும் பள்ளி மாணவிகளிடம் தனிநபர் கலைத்திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் கலா உத்சவ் போட்டிகளை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இப்போட்டிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். இதனை தேசிய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நெறிப்படுத்தி வருகிறது.இவ்வாண்டிற்கான தேசிய அளவிலான கலா உத்சவ் போட்டிகள் 12ம் தேதி (நாளை) முதல் 14ம் தேதி வரை புதுடெல்லியில் உள்ள தேசிய சிறுவர் இல்லத்தில் நடைபெறுகிறது. இதில் வாய்ப்பாட்டு, இசைக்கருவி வாசித்தல், நடனம், ஓவியம் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் புதுச்சேரி மாநில அளவிலான போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 மாணவ, மாணவிகள் பங்குபெறுகின்றனர்.

இப்போட்டிகளில் பங்குபெற புதுச்சேரியை சேர்ந்த 8 மாணவ, மாணவிகள் 2 ஆசிரியர்களுடன் காமராஜர் கல்வி வளாகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வி இயக்குநர் ருத்ர கவுடு, சமக்ர சிக்சா திட்ட இயக்குநர் மொகிந்தர் பால், மாவட்ட திட்ட இணை ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி, தலைமை ஆசிரியர் பாஸ்கர ராசு, கலா உத்சவ் ஒருங்கிணைப்பாளர் அசோக் ஆகியோர் மாணவர்களை வழியனுப்பி வைத்தனர். தேசிய அளவில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு டெல்லியில் வரும் 15ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசு வழங்கப்படுகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : contest ,Delhi ,
× RELATED 2 தொகுதியில் ஒடிசா முதல்வர் போட்டி