×

காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

திருத்தணி டிச. 11: திருத்தணி அருகே சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருத்தணி அடுத்த மத்தூர் கிராமத்தில் உள்ள தங்கசாலைத் தெருவில் 150 வீடுகள் உள்ளன. இங்கு வசிப்பவர்களுக்கு குழாய் இணைப்புகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக 40 வீடுகளுக்கு குடிநீர் சீராக வழங்க வில்லை என்று ஊராட்சி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட 40 குடும்பத்தை சேர்ந்தவர்கள், நேற்று காலை  காலிக்குடங்களுடன் திருத்தணி -மத்தூர் சாலையில் திரண்டனர். சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிர்வாகத்துக்கு எதிராக கோஷமிட்டனர்.

தகவலறிந்த திருத்தணி ஒன்றிய ஆணையர் பாபு, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார், சுகந்தி மற்றும் திருத்தணி வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது பொதுமக்கள் தரப்பில், தங்கசாலைத் தெருவில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள தெருக்குழாய் இணைப்பை நீட்டித்து அனைத்து வீடுகளுக்கும் சீராக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.சுமார் ஐந்து லட்சம் மதிப்பீட்டில்  புதிதாக நிறுவப்பட்டுள்ள உயர் கோபுர மின்விளக்கை உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பது உள்பட பல கோரிக்கை வைத்தனர். மேலும், அடிப்படை வசதிகள் செய்யாததை கண்டித்து அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள், முதலில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் சீராக வழங்க உடனே ஏற்பாடு செய்யப்படும். மற்றக்கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தனர். இதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : Village villagers ,
× RELATED மேலூர் அருகே 3 நாளாக மின்தடை கிராமமக்கள் மறியல்