×

கிராமப்புற மருத்துவமனைகளில் ரேபிஸ் தடுப்பு மருந்துகள் ‘ஸ்டாக்’ இல்லை

ஊட்டி,டிச.7:நீலகிரி  மாவட்டத்தில் இயங்கும் பெரும்பாலான கால்நடை மருத்துவமனைகளில் ரேபிஸ்  மருந்துகள் இல்லாத நிலையில் கால்நடைகளை நாய்கள் கடித்தால், உடனடியாக  சிகிச்சை அளிக்க முடியாமல் உரிமையாளர்கள் திணறி வருகின்றனர். வீட்டில்  வளர்க்கும் நாய்கள், தெரு நாய்கள் மற்றும் வெறி பிடித்த நாய்கள் என எந்த  வகை நாய்கள் கடித்தாலும், உடனடியாக ரேபிஸ் மருந்துகள் உடனடியாக எடுத்துக்  கொண்டாலே, நோயை கடுப்படுத்த முடியும். தவறும் பட்சத்தில் நாய்கள்  கடித்தவர்களின் உடல்களில் இந்த ரேபிஸ் வைரஸ் பரவி உயிரிழக்கும் சூழ்நிலை  ஏற்படும். அதுமட்டுமின்றி, சிகிச்சை உரிய காலத்திற்குள் அளிக்கவில்லை  என்றால், சம்பந்தப்பட்ட நோயாளியின் உமிழ்நீர் மூலமாகவும் மற்றவர்களுக்கு  நோய் பரவும் அபாயம் உள்ளது. இது மனிதர்களுக்கு மட்டுமில்லை. கால்நடைகள்  மற்றும் விலங்குகளுக்கும் பொருந்தும். ஆடு, மாடு போன்ற கால்நடைகளை நாய்கள்  கடித்துவிட்டால், உடனடியாக ரேபிஸ் வகை மருந்துகளை அவைகளுக்கு அளித்தாக  வேண்டும். இதற்கான ரேபிஸ் தடுப்பு மருந்துகள் அனைத்து கால்நடை  மருத்துவமனைகளிலும் எப்போதும் இருப்பில் இருத்தல் வேண்டும்.

ஆனால்,  தற்போது நீலகிரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான கால்நடை  மருத்துவமனைகளில் மருத்துவர்களும் இருப்பதில்லை. மருந்துகளும்  இருப்பதில்லை. கால்நடைகளை நாய்கள் கடித்துவிட்டதாக  உரிமையாளர்கள் கால்நடைகளை அழைத்துச் சென்றால், தங்களிடம் ரேபிஸ் தடுப்பு  மருந்துகள் இல்லை. தனியார் மெடிக்கலில் இருந்து வாங்கிக் கொடுங்கள்  போட்டுவிடுகிறோம் என ஊழியர்கள் தெரிவிக்கிறார்களாம். தொடர்ந்து, கால்நடை  உரிமையாளர்கள் ஊட்டி அல்லது குன்னூர் பகுதிகளுக்கு வந்து தனியார்  மருந்தகங்களில் பணம் கொடுத்து, இந்த ரேபிஸ் தடுப்பு மருந்துகளை வாங்கிக்  கொண்டு போய் கொடுத்த பின், சம்பந்தப்பட்ட கால்நடைகளுக்கு மருந்துகள்  அளிக்கப்படுகிறது. இந்த காலதாமதம் காரணமாக ரேபிஸ் வைரஸ்கள் கால்நடைகளில்  உடலில் பரவ வாய்ப்புள்ளது. மேலும், அதன் மூலம் மற்ற கால்நடைகள்  மட்டுமின்றி, அதன் உரிமையாளர்களும் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட  நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும்,  குறிப்பாக கிராமங்களில் உள்ள மருத்துவமனைகளில் ரேபிஸ் தடுப்பு  மருந்துகளை இருப்பில் வைக்க கால்நடை பராமரிப்புத்துறையினருக்கு அறிவுரை  வழங்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் கால்நடை உரிமையாளர்கள்  வலியுறுத்தியுள்ளனர்.

Tags : hospitals ,
× RELATED அனைத்து மாநகராட்சிகளிலும் சித்த...