×

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீப கொப்பரை தயார்

திருவண்ணாமலை, நவ.19: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீப கொப்பரை சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து கோயிலில் ஒப்படைக்கப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத்தொடர்ந்து 10 நாட்கள் தீபத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்தின் முக்கிய விழாவான, மகாதீப பெருவிழா வரும் 23ம் தேதி நடைபெற இருக்கிறது. அன்று காலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும். மகாதீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் தூய செம்பு உலோகத்திலான தீப கொப்பரை சீரமைக்கும் பணி கடந்த 11ம் தேதி தொடங்கியது.

தற்போது, தீப கொப்பரை சீரமைக்கும் பணி நிறைவடைந்தது. அதனை வண்ணம் தீட்டப்பட்டு அதில் தீப ஒளியில் அர்த்தநாரீஸ்வரரின் உருவம் வரையப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் நேற்று தீப கொப்பரைக்கு பூஜை செய்து வாகனம் மூலம் மாடவீதி வழியாக வந்து அண்ணாமலையார் கோயிலில் ஒப்படைக்கப்பட்டது. அங்கு மகாதீபம் ஏற்றும் தீப கொப்பரை சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சுமார் 5 அடி உயரமுள்ள, 200 கிலோ தூய செம்பு உலோகத்திலான தீப கொப்பரை வரும் 22ம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் பூஜை செய்யப்படவுள்ளது. பின்னர் மலை மீது கொண்டு செல்லப்பட்டு, 23ம் தேதி மாலை மகாதீபம் ஏற்றப்படவுள்ளது.

Tags : Makhdeep Copper ,
× RELATED வேன் தலைகீழாக கவிழ்ந்து 10 பேர் காயம் சேத்துப்பட்டு மாதாமலையில்