×

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கும் முகாம்

பெரம்பலூர்,அக்.16: வெள்ளாடுகள், செம்மறியாடுகளுக்கான குடற்புழு நீக்கம் முகாம் வருகிற 26,27 தேதிகளில் நடக்கிறது என பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசால் கடந்த 2011 செப்டம்பர் 15ம்தேதியன்று தொடங்கப்பட்ட இலவச வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டங்களில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக, ஒரு பயனாளிக்கு 4 வெள்ளாடுகள், செம்மறிஆடுகள் வழங்கப்பட்டு வருகிறது. இலவச வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டங்களின் மூலம் பயன்பெறும் பயனாளிகள் தங்கள் கால்நடைகளை கொள்முதல் செய்தபிறகு நன்கு பராமரிக்க வேண்டும் என அரசால் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இலவச வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டங்கள் மூலம் வழங்கப்பட்ட வெள்ளாடுகள், செம்மறியாடுகளின் எடையினை அதிகரிக்கவும், தமிழகம் முழுவதும் வருகிற 26,27 ஆகிய தேதிகளில் இலவச வெள்ளாடுகள், செம்மறியாடுகளுக்கு குடற்புழுநீக்க முகாம் நடைபெற உள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இலவச வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கப்பட்ட 29 கிராம ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகங்களில் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கான குடற்புழு நீக்க முகாம் நடைபெறவுள்ளது.  இந்த முகாமில் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளை பெற்ற பயனாளிகள் மட்டுமல்லாமல் அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : camp ,district ,Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி