×

பைக் வாங்கி தர மறுத்ததால் விபரீதம் மகன் தூக்கிட்டு தற்கொலை தாயும் தீக்குளித்து சாவு:கேளம்பாக்கம் அருகே சோகம்

சென்னை, அக். 16: பைக் வாங்கித்தர மறுத்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், மனமுடைந்த தாய் தீக்குளித்து தற்கொலை  செய்து ெகாண்ட சம்பவம் கேளம்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.கேளம்பாக்கம் அடுத்த கீழக்கோட்டையூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் இந்திராணி (42). இவரது கணவர் வெங்கடேசன். 3 வருடங்களுக்கு  முன் இறந்துவிட்டார். தம்பதியின் 2வது மகன் கோவிந்தராஜ் (16). அதே பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் வேலை செய்து வந்தார். இவர், தனக்கு  விலை உயர்ந்த பைக் ஒன்றை வாங்கி தரும்படி தனது தாயிடம் கடந்த ஒரு மாதமாக வற்புறுத்தி வந்தார். ஆனால், ‘‘நானே வீட்டு வேலை செய்து குடும்பத்தை  நடத்துகிறேன். வறுமையான நிலையில் என்னால் எப்படி விலை உயர்ந்த பைக் வாங்கி தர முடியும்’’ என தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் காலை, மீண்டும் இதுகுறித்து தனது தாயிடம் கோவிந்தராஜ் வலியுறுத்தி உள்ளார். அவர் மறுத்துவிட்டு வேலைக்கு  சென்றுவிட்டார். இந்நிலையில், மாலை வேலை முடிந்து இந்திராணி வீடு திரும்பியபோது, மகன் கோவிந்தராஜ் வீட்டில் தூக்கிட்டு சடலமாக  தொங்குவது தெரிந்தது. இதை பார்த்து அலறி துடித்தார்.

நேற்று முன்தினம் இரவு கோவிந்தராஜின் உடல் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இதில், உறவினர்கள் கலந்து கொண்டனர். இரவு  முழுவதும் மகன் சடலத்தின் முன்பு அழுதபடி அமர்ந்திருந்த இந்திராணி, நேற்று காலை வீட்டுக்குள் சென்று தனது உடலில் மண்ணெண்ணெயை  ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு  ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தாழம்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.  கோவிந்தராஜ் சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, பிரேத பரிசோதனை முடிந்து  உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, சிகிச்சை பலனின்றி இந்திராணியும் இறந்தார். மகன் இறந்த துக்கத்தில் தாயும்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags : suicides ,deaths ,
× RELATED 10 ஆண்டுகளில் 4.25 லட்சம் பேர் தற்கொலை:...