×

கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஓய்வுபெற்ற தாசில்தார் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி: 20 ஆண்டாக வசிக்கும் வீட்டை காலிசெய்ய மிரட்டுவதாக புகார்

திருவண்ணாமலை, அக்.16: திருவண்ணாமலையில் 20 ஆண்டுகளாக குடியிருக்கும் வீட்டை காலி செய்ய மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஓய்வுபெற்ற தாசில்தார் தன்னுடைய குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடந்தது. அதில், டிஆர்ஓ ரத்தினசாமி, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதன்மீது, உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், திருவண்ணாமலை தாமரை நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் இளங்கோவன்(63). ஓய்வுபெற்ற தாசில்தார். அவரது மகன் ராஜசேகர்(34), மருமகள் காயத்ரி(30), பேத்தி தனுஸ்ரீ(5), மகள் சித்ரா(40) ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே, குடும்பத்தினருடன் நின்றிருந்த இளங்கோவன், திடீரென மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். மேலும், அவரது குடும்பத்தினரும் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டனர். அதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே, அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, மண்ணெண்ணைய் பறிமுதல் செய்தனர். சிறுமி தனுஸ்ரீயின் கண்களில் மண்ணெண்ணைய் சிதறியதால், எரிச்சல் ஏற்பட்டு துடித்தார். உடனே சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து இளங்கோவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கூறியதாவது: தாமரை நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டை, கடந்த 1999ம் ஆண்டு குமரசேன் என்பவரிடம் ₹1.35 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியதாகவும், வீட்டுவசதி வாரிய கடன் முடிந்ததும் தங்களுடைய பெயருக்கு பத்திரப்பதிவு செய்வதாகவும் அக்ரிமெண்ட் செய்துகொண்டோம். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறொரு நபருக்கு வீட்டை விற்றுவிட்டதாக தெரிவித்தார். மேலும், குமரசன், வெற்றிச்செல்வன் உள்ளிட்ட 30 பேர் கொண்ட கும்பல், என்னுடைய வீட்டுக்கு வந்து பொருட்களை எடுத்து வீசி கொலை மிரட்டல் விடுத்தனர். புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் வேறுவழியின்றி தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், வெம்பாக்கம் தாலுகா உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வசதி செய்துத்தர வலியுறுத்தியும், கிளிப்பட்டு மதுரா சிகாரிகொட்டா பகுதிக்கு செல்லும் பொது வழிப்பாதையை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்பை அகற்றி பாதை வசதி செய்துத்தரக்கோரியும் மனு அளித்தனர்.

Tags : Collector ,house ,Tashildar ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...