×

பெரும்பாலான விவசாயிகள் புறக்கணிப்பு மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தலில் 22 சதவீத வாக்குப்பதிவு

நாமக்கல், அக்.12:  மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடைபெற்ற நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலை, பெரும்பாலான விவசாயிகள் புறக்கணித்து விட்டதால் 22 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டம் மோகனூரில், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பொதுப்பிரிவில் உள்ள 9 நிர்வாக குழு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 32 பேர் போட்டியிட்டனர். நேற்று நாமக்கல், மோகனூர், பரமத்திவேலூர், ராசிபுரம், ஆத்தூர், தொட்டியம், பாலப்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த மொத்தம் 17 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்கு தேர்தல் துவங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. ஒரு வாக்குசாவடி மையத்துக்கு 4 தேர்தல் அலுவலர்கள், போலீஸ் பாதுகாப்பு என பொதுத்தேர்தல் போன்றே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தேர்தல் பணியில் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், சர்க்கரை ஆலை அலுவலர்கள் என சுமார் 350 பேர் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு வாக்குசாவடி மையத்துக்கும் சார்பதிவாளர் அந்தஸ்தில், கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணித்தனர். அனைத்து மையங்களிலும் வாக்களிக்க வந்த விவசாயிகளின் எண்ணிக்கை மிக குறைவாகவே காணப்பட்டது. வாக்குசாவடி மையங்கள் முன்பு, அதிமுகவை சேர்ந்த உள்ளூர் பிரமுகர்கள், அதிமுகவினரை அழைத்து வந்து விவசாயிகள் பெயர், பதிவு எண் போன்ற விபரங்களை எழுதி கொடுத்து ஓட்டு போட அனுப்பிவைத்தனர். இதை அங்கிருந்த போலீசாரும், தேர்தல் அலுவலர்களும் வேடிக்கை பார்த்தபடியே இருந்தனர். தேர்தல் அலுவலர் அறிவித்த எந்தவித ஆவணங்களும் இன்றி, பலர் வாக்களித்தனர். ஒவ்வொரு விவசாயியும் 9 பேருக்கு வாக்களிக்கவேண்டும். வாக்களிக்க வருபவர்களுக்கு குறிப்பிட்ட 9 பேரின் பெயர் அச்சடித்த பிட் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டு, அவர்களுக்கு மட்டும் ஓட்டுபோட அதிமுகவினர் அறிவுறுத்தினர்.

மாலை 5 மணி வரை வாக்குபதிவு நடைபெற்றது. அதன் பிறகு வாக்கு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு  போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 33,097 விவசாயிகள் அங்கத்தினராக உள்ளனர். ஆனால், தேர்தலில் மொத்தம் 7248 வாக்குகள் பதிவானது. இது 22 சதவீதமாகும். இது குறித்து குமரிபாளையத்தை சேர்ந்த கரும்பு விவசாயி பொன்னுசாமி(55) கூறுகையில், ‘எனது 25 வயதில் இருந்து மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அங்கத்தினராக இருந்து வருகிறேன். முதன்முறையாக நடைபெற்ற தேர்தலில் நான் வாக்களிக்கவில்லை. தேர்தல் தொடர்பாக முறைப்படி எந்த அறிவிப்பும் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு தெரியப்படுத்தவில்லை. தேர்தல் நடைபெற்றதே எங்களுக்கு எல்லாம் தெரியாது,’ என்றார். தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (12ம் தேதி) காலை 10 மணிக்கு, மோகனூரில் உள்ள சர்க்கரை ஆலை திருமண மண்டபத்தில் எண்ணப்படுகிறது. மதியம் 2 மணிக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

Tags : election ,Mohanur Cooperative Sugar Mill ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...