×

மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே பயணிகளுடன் ஆட்டோ இயக்க போலீசார் தடை

ஊட்டி,அக்.12: மேட்டுப்பாளையத்தில்  இருந்து குன்னூர் பகுதிக்கு ஆட்டோவில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.  பாதுகாப்பு கருதி விரைவில் தொட்டபெட்டாவிற்கு ஆட்டோக்கள் செல்ல தடை  விதிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் ரயில்,  பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் வருகின்றனர். ஒரு சிலர்  மேட்டுப்பாளையத்தில் இருந்து ஆட்டோக்களில் வருகின்றனர். அதிகாலை ேநரங்களில்  ரயில்கள் மூலம் வரும் சுற்றுலா பயணிகளை மூளை சலவை செய்யும் சில ஆட்டோ  ஓட்டுநர்கள் குன்னூர் வரை ஆட்டோக்களில் ஏற்றி வருவதாக கூறப்படுகிறது. அதேபோல்,  சில ஆட்டோ ஓட்டுநர்கள் குன்னூர் பகுதியில் இருந்தும்  மேட்டுப்பாளையத்திற்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்லப்படுவதாக  கூறப்படுகிறது. இதனால், விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக புகார்  எழுந்தது. இதனை தொடர்ந்து, இனி மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர்  பகுதிக்கும், குன்னூர் பகுதியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ஆட்டோக்கள்  ஏற்றிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நீலகிரி எஸ்பி.,  சண்முகப்பிரியா கூறுகையில், ஆட்டோக்கள் 15 கி.மீ.,க்குள் மட்டுமே இயக்க  வேண்டும். மலைப்பாங்கான மற்றும் விபத்து ஏற்படும் என அபாயம் உள்ள  பகுதிகளில் ஆட்டோவில் பயணிகளை ஏற்றி செல்ல தடை உள்ளது. ஆனால், சிலர்  மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை  ஏற்றிச் செல்வதாக கூறப்படுகிறது. இனி, மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே  பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும்,  தொட்டபெட்டா பகுதிக்கு சில சமயங்களில் ஆட்டோக்கள் செல்வதாக கூறப்படுகிறது. தொட்டபெட்டா  சாலை செங்குத்தான மலையில் அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் ஆட்டோக்கள்  செல்ல தடையுள்ளதாக கூறப்படுகிறது. இனி வரும் காலங்களில் இது குறித்து ஆய்வு  மேற்கொள்ளப்படும். சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி தொட்டபெட்டா  பகுதிக்கு ஆட்டோக்கள் செல்லாமல் இருக்கவும் தடை செய்வது குறித்து  பரிசீலிக்கப்படும், என்றார்.

Tags : passengers ,Auto-traffic police ,Coonoor ,Mettupalayam ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள் பயணம்