×

காலாவதியான மருந்தா? கோமாரி நோய்க்கு 4 மாடு பலி

உடுமலை, செப். 19: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தேவனூர்புதூர் ஊராட்சி ஆண்டியூர் கிராமத்தில் விவசாயத்துடன், கால்நடை வளர்ப்பும் நடந்து வருகிறது. கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்காமல் இருக்க ஆண்டுதோறும் கால்நடை துறை சார்பில் தடுப்பூசி போடப்படுகிறது.
 ஆண்டியூர் கிராமத்தில் கால்நடைகளை கோமாரி நோய் தாக்கியுள்ளது. இங்குள்ள விவசாயிகள் கனகராஜ், மூர்த்தி, நல்லமுத்து ஆகியோர் வளர்த்து வந்த இரண்டு பசு, ஒரு காளை, ஒரு கன்றுக்குட்டிக்கு வாயில் இருந்து எச்சில் வடிந்து, நாக்கு, மூக்குகளில் புண் ஏற்பட்டு இறந்தன.இதனால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதேபோல், ராவணாபுரம், கரட்டூர், புங்கமுத்தூர், செல்லப்பம்பாளையம், எரிசனம்பட்டி கிராமங்களிலும் கால்நடைகளை நோய் தாக்கி உள்ளது.தகவல் அறிந்ததும், உடுமலை கால்நடை உதவி இயக்குனர் ரகுநாதன் தலைமையில் குழுவினர் செல்லப்பம்பாளையம், கரட்டுமடம் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்துக்கு நேற்று வந்தனர். இறந்த 6 மாத கன்றுக்குட்டியை பார்வையிட்டனர்.கன்றுக்குட்டியை பிரேத பரிசோதனை செய்ய உதவி இயக்குனர் ரகுநாதன் உத்தரவிட்டார். இதுகுறித்து ஆண்டியூர் விவசாயி கனகராஜ் கூறுகையில்,`ஆகஸ்ட் 28ம் தேதி கோமாரி தடுப்பூசி  போடப்பட்டது. அதன்பிறகே மாடுகளின் வாயில் இருந்து எச்சில் வடிவதும், நாக்கில் புண்ணும் ஏற்பட்டது.

இதுபற்றி கால்நடை மருத்துவர்களிடம் தெரிவித்தோம். உள்ளூர் மருத்துவர் நேரடியாக வந்து சிகிச்சை அளித்தார். கால்நடை மருந்தகத்தில் போதுமான மருந்து இல்லாததால் ரூ.8 ஆயிரம் கொடுத்து வெளியில் மருந்து வாங்கி கொடுத்தோம். இருப்பினும், மாடுகளை காப்பாற்ற முடியவில்லை. காலாவதியான தடுப்பூசியை போட்டதால் மாடு இறந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றார். இதுபற்றி கால்நடை உதவி இயக்குனர் ரகுநாதன் கூறியதாவது: கோமாரி நோய் தடுப்பூசியானது 21 நாட்களுக்கு பிறகே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கக்கூடியது. இடைப்பட்ட காலத்தில், தடுப்பூசி போடப்படாத கால்நடைகளை சந்தைகளில் விவசாயிகள் வாங்கி வரும்போது, நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் மீது அமரும் ஈ, கொசு, உண்ணி போன்றவற்றால் இந்த மாடுகளுக்கும் நோய் பரவி இருக்கலாம்.

6 மாதத்துக்கு ஒருமுறை அவிநாசியில் இருந்து புதிய தடுப்பூசி வரவழைக்கப்பட்டு, ஒரு மாட்டுக்கு ஒரு நீடில் என்ற கணக்கில் தடுப்பூசி போட்டு வருகிறோம். இதனால், காலாவதியான மருந்து என்றே பேச்சுக்கே இடமில்லை. இறந்த கன்றுக்குட்டி உடலை பிரேத பரிசோதனை செய்வதன் மூலம் நோய்க்கான உண்மையான காரணம் தெரியவரும்.

Tags :
× RELATED தேவர் சோலை பேரூராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதிய சாலை திறப்பு