×

ஆம்புலன்ஸ் வாங்க மத்திய அரசு வழங்கிய நிதி எங்கே?

புதுச்சேரி, ஆக. 15: பாஜக மாநில தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
புதுச்சேரி மாநிலத்திற்கு தேசிய ஆம்புலன்ஸ் திட்டத்தின் கீழ் 12 ஆம்புலன்ஸ் வாங்குவதற்கு ரூ.2.93 கோடி வழங்கியது. இந்த நிதி எங்கே போனது என்று தெரியவில்லை. புதுச்சேரியில் கடந்த 8 மாதத்தில் 969 விபத்துகள் நடந்துள்ளது. 4 மாதத்தில் 113 பேர் தலையில் அடிபட்டு இறந்துள்ளனர். ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானதால்தான் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. சுகாதாரம், சென்டாக் கல்வி உதவிதொகை ஆகியவற்றில் புதுச்சேரி அரசு தோல்வி அடைந்துள்ளது. சென்டாக் கோப்பு கவர்னரிடம் இருப்பதாக முதல்வர் கூறுகிறார். ஆனால் கவர்னர், தன்னிடத்தில் கோப்பு இல்லை என்கிறார். சென்டாக் பணம் வழங்காததற்கு முதல்வர் தான் பொறுப்பு.

எல்லா விஷயத்திலும் கவர்னர் பெயரை சொல்லி முதல்வர் தப்பிக்கிறார். விதிமீறி பத்திரப்பதிவு செய்தல் உள்ளிட்ட பல விவகாரங்களை கண்டித்து வில்லியனூரில் இன்று (15ம் தேதி) பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். புதுச்சேரியில் முதல் முறையாக வரும் 21, 22ம் தேதிகளில் தென்மாநில அளவிலான பாஜக விவசாயிகள் அணி மாநாடு நடக்கிறது. மழைவெள்ளம் பாதித்த கேரளாவுக்கு பாஜக சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண பொருட்கள் அடுத்த வாரம் அனுப்பி வைக்கப்படும். முதல்வர் தொகுதியான நெல்லித்தோப்பில் விபசாரம், கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. இதுகுறித்து டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகள் விற்பனையை தடுக்காத அமைச்சர், உரிமம் பெற்று இயங்கும் ஆலைகளுக்கு சீல் வைக்கிறார். இதுபோல் சீல் வைக்க அவருக்கு அதிகாரம் இருக்கிறதா? இதில் உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...