×

நாராயணசாமி- நமச்சிவாயம் நேரடி மோதல்

புதுச்சேரி,  ஆக. 15: புதுவையில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் மூலம் தங்களது பலத்தை கட்சி  தலைமைக்கு நிரூபிக்கும் வகையில் முதல்வர் நாராயணசாமியும், அமைச்சர்  நமச்சிவாயமும் நேரடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கட்சிக்குள் பிளவு ஏற்
படும் நிலை உருவாகி உள்ளது.அகில  இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல்காந்தி பதவியேற்ற பின் கட்சியில்  இளைஞர்களுக்கு அதிகளவில் முக்கியத்துவம் அளித்து வருகிறார். அதன்படி  மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் பதவிகளை பிடிப்பதில் காங்கிரசாரிடையே கடும் போட்டி நிலவுகிறது. புதுவையில் மாணவர்  காங்கிரஸ் தேர்தல் முடிந்த கையோடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்தல்  அறிவிக்கப்பட்டது. ஆக. 11, 12ம் தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட  இத்தேர்தல், திமுக தலைவர் கருணாநிதி மறைவு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. தற்போது வரும் 18, 19ம் தேதிகளில் நடைபெறுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளில் சில திருத்தங்கள்  செய்யப்பட்டு 2 மாதங்களாக புதிய உறுப்பினர் சேர்க்கை நடந்து முடிந்தது. தேர்தலுக்காக தொகுதி வாரியாக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு  வருகிறது. தற்போது சுமார் 23 ஆயிரம் உறுப்பினர்கள் புதுச்சேரி இளைஞர்  காங்கிரஸ் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை பெற்றுள்ளனர். தலைவர்-1, துணைத்  தலைவர்கள்-4, பொதுச்செயலாளர்-11 மற்றும் தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட  பதவிகளுக்கு இத்தேர்தல் நடைபெறுகிறது. ஒரு உறுப்பினர் 3 ஓட்டுகள் போட  வேண்டும்.

 தற்போதைய நிலவரப்படி இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு 9 பேர்  வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். இவர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு  செய்யப்பட்டுவிட்டது. வில்லியனூர் பூக்கடை ரமேஷ் -இறகுபந்து,  லட்சுமிகாந்தன் -மிக்சி, அசோக்ராஜ் -மின்னல், செய்னா -சிங்கம், காளிமுத்து -  தையல் இயந்திரம், கார்த்திக் - பென்சில் சார்ப்னர், ரகுபதி - மலை, ஜெயதீபன்  -நெக்லஸ், வேல்முருகன் -ஆந்தை உள்ளிட்ட சின்னங்களில் களத்தில்  நிற்கின்றனர். பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவர்களின்  சின்னங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பதவிக்கு அமைச்சர் கந்தசாமியின் மகன்  விக்னேஷ், காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு மகன் அசோஷிண்டேவும்  போட்டியிடுகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் அனைவரும்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் தலைவர் பதவியை  பிடிப்பதில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சரும், மாநில காங்கிரஸ் தலைவருமான  நமச்சிவாயம் ஆதரவாளர்கள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.  லட்சுமிகாந்தனுக்கு ஆதரவாக முதல்வரும், ரமேசுக்கு ஆதரவாக நமச்சிவாயமும்  செயல்பட்டு வருகின்றனர். அவர்களே தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில்  நேரடியாக வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாநில, மாவட்ட, வட்டார  காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ரகசிய பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர்.
  நேற்று வில்லியனூரில் இதுதொடர்பாக தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டிய  அமைச்சர் நமச்சிவாயம், கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் ஏமாற்றப்பட்டோம். இதனால் இந்த முறை  நாம் கட்டாயம் வெற்றிபெற்று நமது பலத்தை கட்சியின் தேசிய தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும். இதற்காக எந்த அளவுக்கு இறங்கியும் வேலை செய்ய வேண்டும். அனைவரும் தீவிர களப்பணியாற்ற  வேண்டும் என்று பகிரங்கமாக உத்தரவு போட்டுள்ளார்.

 இதுபோன்ற செயல்பாடுகளால் ஆளுங்கட்சியில் மோதல்  ஏற்பட்டு காங்கிரசில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இதை அறிந்த  மூத்த நிர்வாகிகள் கட்சியின் அகில இந்திய தலைமைக்கு புகார் மனுக்களை  அனுப்பி வருகின்றனர். கட்சியில் பிளவு ஏற்படுவதை தவிர்த்து ஒருமித்த  கருத்துடன் இளைஞர் காங்கிரஸ் தலைவரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென  வலியுறுத்த தொடங்கி உள்ளனர். இருப்பினும் இத்தேர்தலில் காங்கிரசில்  யாருடைய கை ஓங்கப்போகிறது? என்ற பரபரப்பு அரசியல் வட்டாரத்தில்  எழுந்துள்ளது.  காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி மற்ற கட்சிகளும்  இத்தேர்தலை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. எது எப்படியோ இத்தேர்தல் முடிவு  காங்கிரசில் இருந்த ஒற்றுமையை சீர்குலைக்கும் என்பதில் ஐயமில்லை. இதன்  தாக்கம் அடுத்து வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கலாம்  என்பதால் காங்கிரஸ் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...