×

போக்குவரத்து காவல்துறையில் விழிப்புணர்வு பீட் பிரிவு துவக்கம்

புதுச்சேரி, ஆக. 15: புதுவையில் முதன்முறையாக போக்குவரத்து காவல்துறையில் விழிப்புணர்வு பீட் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.  புதுவையில் போக்குவரத்து நெரிசல், விபத்துகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை  காவல்துறை தலைமை முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக புதுவை கிழக்கு  டிராபிக் காவல் சரகத்தில் போக்குவரத்து பீட் காவலர் பிரிவு நேற்று புதிதாக  தொடங்கப்பட்டது. ராஜா தியேட்டர் சந்திப்பில் 4 பீட் காவலர் பிரிவை  டிராபிக் எஸ்பி வீர.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்  இன்ஸ்பெக்டர்கள் ஜெயராமன் (டிராபிக்), மோகன்குமார் (பெரியகடை),  சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுபதி, சஜித், வெங்கடேசன் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டனர். முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ள போக்குவரத்து காவலர் பீட்  பிரிவில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் கடற்கரை சாலை, பாரதி  பூங்கா, நேரு வீதி, புஸ்சி வீதி ஆகிய பகுதிகளில் ரோந்து பணிகளில்  ஈடுபட்டு பார்க்கிங் நடைமுறை, போக்குவரத்து நெரிசல், வாகனங்களை  ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள்.
 ஒவ்வொரு  குழுவிலும் தலா 2 காவலர்கள் இடம்பெற்றுள்ள நிலையில்  போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மோட்டார்  சைக்கிள், மெகா போன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து  விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது உடனடி அபராதம் விதிக்கவும் அவர்களுக்கு  அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 இதுதவிர நேருவீதியில் ஒருபக்க பார்க்கிங்  (தெற்குபுறம்) நடைமுறை அமலில் உள்ள நிலையில் வடக்கு பக்கத்திலும்  விதிமுறைகள் மீறி வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதுதொடர்பாகவும் டிராபிக்  அதிகாரிகளுக்கு புகார் வந்த நிலையில் வடக்கு புறத்தில் பேரிகார்டுகள்  அமைத்து வாகனங்கள் நிறுத்த முடியாத வகையில் ரிப்பன் கட்டி தடுப்பு  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. இதுதொடர்பாக டிராபிக் எஸ்பி  வீரபாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, புதுவை போக்குவரத்து காவல்துறையில்  முதன்முறையாக பீட் காவலர்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்  தற்போது முக்கிய பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் மெகா போனுடன் சென்று  போக்குரத்தை சரிசெய்யும் பணிகளில் ஈடுபடுவார்கள். வழக்கமான பணிகளில்  ஈடுபடும் காவலர்களை தவிர்த்து கூடுதலாக பீட் காவலர்கள் பணிக்கு  அமர்த்தப்பட்டுள்ளனர். இது படிப்படியாக மற்ற பகுதிக்கும்  விரிவுபடுத்தப்படும் என்றார்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...