×

40 ஆண்டுக்கு பிறகு நடந்தது மாநில அளவிலான போட்டி பெரம்பலூர் கிரிக்கெட் சங்க அணி வெற்றி

பெரம்பலூர்,ஆக.14:  தமிழக அளவில் 17 வயதிற்கு உட்பட்டோருக்கு நடந்த கிரிக்கெட் போட்டி, இறுதியில் 6 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி பெரம்பலூர் கிரிக்கெட் சங்க அணி கோப்பையை வென்றது.பெரம்பலூரில் தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் சார்பாக, பெரம்பலூர் தனலட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான, 9வது மாநில அளவிலான சேம்பியன்ஷிப் 3 நாள் கிரிக்கெட் போட்டி கடந்த 10ம் தேதி தொடங்கியது. பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடந்த விளையாட்டு போட்டிகளை கல்விக் குழுமங்களின் நிறுவனர் தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு நடத்தப்பட்ட இந்த மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில், தமிழகத்திலுள்ள 12 மாவட்டங்களை சேர்ந்த கிரிக்கெட் அணியினர் கலந்து கொண்டனர். இதில் நாக்அவுட் முறையில், பெரம்பலூர், நாமக்கல், சென்னை, அரியலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. இவற்றில் அரியலூர், திருவண்ணாமலை அணிகள் தோற்று வெளியேறிய பிறகு, அரைஇறுதி போட்டியில் பெரம்பலூர், நாமக்கல் மாவட்ட அணிகள் மோதிய ஆட்டத்தில் பெரம்பலூர் மாவட்டமும், திருவள்ளூர், சென்னை மாவட்டஅணிகள் மோதிய ஆட்டத்தில் சென்னை மாவட்டமும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

இதனையடுத்து நேற்று மாலை நடந்த இறுதி போட்டியில் பெரம்பலூர், சென்னை அணிகள் மோதிய ஆட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் அணி வெற்றிபெற்று தனலட்சுமி அம்மாள் நினைவு கோப்பையை வென்றது. இந்த போட்டிகளில் தொடர் நாயகனாக பெரம்பலூர் கிரிக்கெட் அணியை சேர்ந்த சாம்கென்னடியும், ஆட்ட நாயகனாக சென்னை அணியை சேர்ந்த கோகுல் என்பவரும் தேர்வு செய்யப்பட்டனர். இதில் பெரம்பலூர் அணி நிர்ணயித்த 108 ரன்கள் இலக்கை வெல்லமுடியாமல் சென்னையால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே பெற முடிந்தது. பெரம்பலூர் மாவட்ட அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மாநில அளவிலான கோப்பையை கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமங்களின் நிறுவனர் தலைவர் சீனிவாசன் தலைமை நடந்த பரிசளிப்பு விழாவில், கல்விக்குழுமங்களின் நிர்வாக அலுவலர் ராஜசேகர் கலந்து கொண்டு பரிசுக்கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினர்.

Tags :
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...