×

மாநகர பகுதியில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரியை திரும்ப பெற வேண்டும்

ஈரோடு:  மாநகர பகுதியில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பில் நேற்று மனு அளிக்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட இடையான்காட்டுவலசு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு உயர்த்தி உள்ள சொத்து வரியால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஈரோடு மாநகராட்சியில் கடந்த நிதியாண்டில் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் வரி உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது இந்தாண்டும் சொத்து வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த நிதியாண்டில் உயர்த்தப்பட்ட வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தற்போது மீண்டும் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சிகுட்பட்ட புறநகர் பகுதிகளில் ஏராளமான கட்டிடங்களுக்கு வரி விதிக்கப்படாமல் உள்ளது. எனவே முறையாக ஆய்வு செய்து வரி விதிக்கப்படாமல் உள்ள கட்டிடங்களுக்கு வரி வசூல் செய்து மாநகராட்சி வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு அரசு அறிவித்துள்ள வரியை முழுமையாக திரும்ப பெற மாநகராட்சி நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மயான வசதி: நசியனூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கதிரம்பட்டி சாலையில் சிந்தன்குட்டை என்ற இடத்தில் பல ஆண்டுகளாக சுடுகாடு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கம் செய்யும் போது சுடுகாடு அமைந்திருந்த பகுதி சாலையாக மாற்றப்பட்டுவிட்டது. சுடுகாட்டின் பெரும் பகுதி சாலையாக மாறிவிட்ட காரணத்தினால் இட நெருக்கடி ஏற்பட்டு சடலங்களை புதைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   

எனவே பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சுடுகாடு அமைக்க இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று நசியனூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததையடுத்து நசியனூர் பகுதி நெசவாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் இது தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர்.

சட்டப்பஞ்சாயத்து இயக்கம்:  ஈரோடு மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் முறையாக நடத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பஞ்சாயத்து இயக்கம் வலியுறுத்தி உள்ளது. சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் மாநகர ஒருங்கிணைப்பாளர் கண்ணையன் கூறியதாவது: கிராம ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டம் நடத்துவது தொடர்பாக பொதுமக்களுக்கு முறையாக தகவல் தெரிவிப்பது இல்லை. வருகிற சுதந்திரதினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆனால் சில ஊராட்சிகளில் இது தொடர்பாக பொதுமக்களுக்கு தண்டோரா அல்லது துண்டறிக்கை மூலமாகவே எவ்வித தகவலும் தெரிவிக்கப்படாமல் உள்ளது. பொதுமக்களே இல்லாமல் கிராம சபை கூட்டம் நடத்தியது போல ஆவணங்களில் பதிவு செய்து விடுகின்றனர். இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, மாவட்ட நிர்வாகம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இது தொடர்பாக கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கண்ணையன் கூறினார்.

Tags :
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...