×

எல்ஐசி அதிகாரி மீது பணம் முறைகேடு புகார் கலெக்டர் அலுவலகத்தில் பெண் மனு

தர்மபுரி, ஆக.14: தர்மபுரி எல்ஐசி அதிகாரி முறைகேடு செய்ததாக, கலெக்டர் அலுவலகத்தில் பெண் புகார் மனு அளித்துள்ளார். தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகில், நேரு நகரைச் சேர்ந்தவர் சிங்காரவேலு மனைவி ஜெயஸ்ரீ(48). இவர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் சிங்காரவேலு வனத்துறையில் பணியாற்றி, கடந்த 2011ம் ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். எனக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இதையடுத்து எல்ஐசி ஏஜெண்டாக மாறினேன். அப்போது தர்மபுரி எல்ஐசி அலுவலகத்தில், வளர்ச்சி அதிகாரி எல்ஐசி ஏஜெண்டிற்கு வழிகாட்டினார். இந்நிலையில், எனது மகன் வெளிநாட்டில் படிக்க முயற்சி செய்தபோது, ரூ1கோடி பாலிசி எடுக்க வேண்டி ஜீவன் சிரோன்மணி என்ற பாலிசி எடுக்க, வளர்ச்சி அதிகாரியை தொடர்பு கொண்டேன்.

இந்த பாலிசிக்கு ஆண்டுக்கு ஏழரை லட்சம் பணம் கட்டவேண்டும். நம்பிக்கையின் அடிப்படையில் காசோலை நிரப்பாமல் கொடுத்தேன். ஆனால், நான் கொடுத்த காசோலையை என் மகன் பெயரில் பாலிசி எடுக்காமல், மாவட்ட குழந்தைகள் நல அலுவலக பணியாளர் மற்றும் மற்றொரு பெண் எல்ஐசி முகவர் கணக்கில் காசோலையை பரிமாற்றம் செய்து, சுமார் ரூ4 லட்சம் மோசடி செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து எல்ஐசி வளர்ச்சி அதிகாரி மீது அலுவலகத்தில் புகார் அளித்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, முறைகேடாக பயன்படுத்திய என்னுடைய ரூ4 லட்சத்தை திருப்பி பெற்றுத்தர வேண்டும். காசோலையை தவறாக பயன்படுத்திய எல்ஐசி வளர்ச்சி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா