×

தொழுநோய் மருத்துவமனை ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ஒன்றரை கோடி சம்பளம்

புதுச்சேரி, ஆக. 13: யூனியன் பிரதேசமான புதுச்சேரி தற்போது போதிய நிதியின்றி வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டு மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் இருக்கும் நிதி ஆதாரங்களை சீர்குலைக்கும் வகையில் பல துறைகளில் தேவைக்கு அதிகமான ஆட்கள் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையில்லாமல் லட்சக்கணக்கான பணம் செலவிடப்பட்டு வருகிறது. இந்த வகையில் திப்ராயப்பேட்டை செயல்பட்டு வரும் மகாத்மா காந்தி தொழுநோய் மருத்துவமனையும் தற்போது தேவைக்கு அதிகமான நிதியை ஆண்டுதோறும் விழுங்கிக்கொண்டிருக்கிறது.தொழுநோய் என்பது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டியதுதான். அதற்காக எவ்வளவு செலவானாலும் அரசு செய்ய வேண்டும்தான். ஆனால் தற்போது தொழுநோய் வெகுவாக குறைந்துவிட்ட நிலையில் அங்கொன்றும், இங்கொன்றுமாகத்தான் தொழுநோயாளிகள் இருந்து வருகிறார். புதுச்சேரி அரசு சார்பில் நடத்தப்படும் இந்த மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகள் உள்ளன. ஆனால் தற்போது 9 பேர் மட்டுமே உள்ளிருப்பு நோயாளிகளாக உள்ளனர். இந்நிலையில் இங்கு மருத்துவர், செவிலியர், பிற பணியாளர் என 24 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் 1 மருத்துவர், 2 தலைமை நர்ஸ், 8 ஸ்டாப் நர்ஸ் உள்ளிட்டோர் அடங்குவர். இவர்களுக்கு மாதம்தோறும் ரூ.12 லட்சத்து, 98 ஆயிரத்து 540 சம்பளமாக வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ. ஒன்றரை கோடிக்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் தேவையில்லாமல் ஆண்டுக்கு இவ்வளவு பெரிய தொகை சம்பளமாக வீணடிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி கூறுகையில், முன்பு தொழுநோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் பல ஆண்டுகளுக்கு முன்பு அதிகப்படியான பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது தொழுநோய் முற்றிலும் ஒழிக்கப்பட்ட நிலையில் வெறும் 9 பேர் மட்டுமே உள்ேநாயாளிகள் கொண்டு இயங்கும் இந்த மருத்துவமனையில் பணியாளர்கள் எண்ணிக்கை மிக கூடுதலாக உள்ளது. 40 நோயாளிகளுக்கு ஒரு தலைமை செவிலியர், ஒரு செவிலியர் என்பதுதான் சரியான முறை. ஆனால் இங்கு 9 தொழுநோயாளிகளுக்கு 2 தலைமை செவிலியர், 8 செவிலியர் பணியில் உள்ளனர். இங்கு பணிபுரியும் பல ஊழியர்கள் பல ஆயிரம் சம்பளம் பெற்றுக்கொண்டு பணியில்லாமல் உள்ளனர். இதனால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது என்கிறார்.எனவே இந்த மருத்துவமனையில் உள்ள உள்ளிருப்பு நோயாளிகளை கணக்கிட்டு அதற்கேற்ற எண்ணிக்கையில் பணியாளர்களை பணிபுரிய செய்ய வேண்டும். அதிகப்படியான பணியாளர்களை, ஆட்கள் பற்றாக்குறையாக உள்ள கிராமப்புற மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...