×

ஆடி திருவிழாவையொட்டி ஆடு, கோழி இறைச்சி விற்பனை அமோகம்

சேலம், ஆக.13: ஆடித்திருவிழாவையொட்டி, சேலம் மாநகர பகுதிகளில் உள்ள கடைகளில் ேநற்று இறைச்சி விற்பனை அமோகமாக இருந்தது. ஆடி மாதத்தில் சேலம் கோட்டை மாரியம்மனுக்கு 22 நாட்கள் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இதையொட்டி நடப்பாண்டு கடந்த 7ம் தேதி முதல் 10ம்  தேதி வரை கோட்டை மாரியம்மன் கோயிலில் பொங்கல் வைபவம் நிகழ்ச்சி நடந்தது. இதேபோல் மற்ற மாரியம்மன் கோயில்களில் பொங்கல் வைபவம், அலகு  குத்துதல், தீ மிதி விழா, அக்னி கரகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. ஆடித்திருவிழாவில் புதன் கிழமைகளில் பெரும்பாலான வீடுகளில் அசைவம் எடுப்பது  வழக்கம். திமுக தலைவர் கருணாநிதி இறப்பால் கடந்த 8ம் தேதி கடைகள் அடைக்கப்பட்டன. அதனால் அன்று பெரும்பாலான இறைச்சிக்கடைகள் மூடப் பட்டன.  

நேற்று இறைச்சி எடுக்க அதிகளவில் கடைகளில் குவிந்தனர். இதனால் ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி, மீன் கடைகளில் அசைவ பிரியர்களின் கூட்டம்  அலைமோதியது. இது குறித்து சேலத்தை சேர்ந்த இறைச்சி வியாபாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் ஆடித்திருவிழாவில் புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி  விற்பனை அமோகமாக இருக்கும். திருவிழாவின்போது ஒரு வாரத்திற்கு முன்பே விருத்தாசலம், விழுப்புரம், தம்மம்பட்டி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, சின்னசேலம்  உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆடுகளை விலைக்கு வாங்கி வருவோம். கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ஆந்திராவில் இருந்து கடல் மீன்கள்  அதிகளவில் விற்பனைக்கு வருகிறது.

இதைதவிர மேட்டூர் அணையில் இருந்து மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. சேலம் மாநகரத்தில் 500க்கும்  மேற்பட்ட இறைச்சிக்கடைகள் உள்ளன. ஆடித் திருவிழாவையொட்டி இந்த இறைச்சிக்கடைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை நடந்துள்ளது.  அதேபோல் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளும், 20 டன் மீன்களும் விற்பனை நடந்துள்ளது. ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூ. 480 முதல் ரூ. 500 எனவும்,  கோழி இறைச்சி ரூ. 140 முதல் ரூ. 180 எனவும், மீன் இனத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ. 120 முதல் ரூ. 180 எனவும் விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு  வியாபாரிகள் கூறினர்.

Tags :
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி