×

சத்தியமங்கலம் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்

சத்தியமங்கலம், ஆக. 7:  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கொமாரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர், வீனஸ் நகர், ரோஜா நகர் உள்ளிட்ட பகுதியில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதிக்கு பவானி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 15 நாட்களாக இப்பகுதியில் சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கொமாரபாளையம் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர், நேற்று காலிக்குடங்களுடன் சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே சாலைமறியல் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் சீராக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தை தொடர்ந்து சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால், பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மீண்டும் ஊரகவளர்ச்சித்துறை அதிகாரிகள் கொமரபாளையம் ஊராட்சிமன்ற அலுவலகத்திற்கு சென்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் 2 நாட்களில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED திண்டல் முருகன் கோயிலில் ரூ.1.20 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகள்