×

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் ஜாமீனில் அடுத்தடுத்து விடுதலையாகும் ஏடிஎம் மோசடி குற்றவாளிகள்

புதுச்சேரி, ஜூன் 21: புதுச்சேரி மட்டுமின்றி தென்மாநிலங்களை உலுக்கிய போலி ஏடிஎம் கார்டு மோசடி வழக்கில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் குற்றவாளிகள் அனைவரும் அடுத்தடுத்து ஜாமீனில் விடுதலையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இவ்வழக்கை உடனடியாக சிபிஐக்கு மாற்ற வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வலுத்துள்ளது.புதுச்சேரியில் ஏடிஎம் கார்டு மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசார் இதுவரை 11 பேரை கைது செய்துள்ளனர். பல்கலை ஊழியர் பாலாஜி, கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் ஜெயச்சந்திரன் என்ற சந்துரு, சென்னை ஷியாம், கமல், டாக்டர் விவேக், வியாபாரிகள் சிவக்குமார், டேனியல், கணேஷ், சந்துருஜி உதவியாளர் அப்துல் சமது, என்ஆர் காங்கிரஸ் பிரமுகர் சத்யா உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.அவர்கள் தங்களுக்கு இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு புதுச்சேரி மட்டுமின்றி சென்னை ஐகோர்ட்டிலும் முறையிட்டு வருகின்றனர். ஆனால் அவர்களின் மனுக்கள் அரசு தரப்பு வழக்கறிஞர்களின் கடும் எதிர்ப்பால் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வந்தன. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்படும் மாஜி அதிமுக பிரமுகர் சந்துருஜியை 60 நாட்கள் ஆகியும் இதுவரை கைது செய்ய முடியவில்லை. அவர் 100க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை பயன்படுத்தி வருவதாகவும், வெளி மாநிலங்களில் பதுங்கி இருப்பதாகவும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரை கைது செய்யாமல் போலீசார் காலம் கடத்தி வருவது பல்வேறு சந்தேகங்களை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் எழுப்பியுள்ளது.

மோசடிக்கு மூளையாக செயல்பட்டதாக கருதப்படும் அவரை கைது செய்தால் மட்டுமே இவ்வழக்கில் அடுத்தக்கட்ட நகர்வுக்கு சிபிசிஐடி காவல்துறையால் செல்ல முடியும். மேலும் விசாரணையின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர், போலீஸ் பிடியில் இதுவரை சிக்காதது பல்வேறு சந்தேகங்களை கிளப்பி வருகிறது.சந்துருஜியை கைது ெசய்யாததால் குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் புதுச்சேரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. வழக்கு பதிந்து 60 நாட்கள் ஆகியும் குற்றப்பத்திரிகையை போலீசாரால் தாக்கல் செய்ய முடியாத நிலையில் இவ்வழக்கில் சிறை சென்றவர்கள் அனைவரும் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்களின் வழக்கறிஞர்கள் மூலம் வாதங்களை முன்வைத்து ஜாமீன் பெறும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.அதன்படி, முதல்கட்டமாக இவ்வழக்கில் முதலில் கைதான பல்கலை ஊழியர் பாலாஜி, கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் ஜெயச்சந்திரன் ஆகிய 2 பேரும் நிபந்தனை ஜாமீனில் தற்போது விடுவிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை தொடர்ந்து இவ்வழக்கில் கைதான மற்ற குற்றவாளிகளும் அடுத்தடுத்து ஜாமீன் மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வருகின்றனர். இவர்களின் மனுக்களும் அடுத்தடுத்து விசாரணைக்கு ஏற்கப்படும் பட்சத்தில் ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்களின் வழக்கறிஞர்கள் உள்ளனர்.

சிபிசிஐடி போலீசாரின் இத்தகைய நடவடிக்கை ஏடிஎம் கார்டு மோசடி வழக்கை நீர்த்து போக செய்யும் நடவடிக்கைகளில் ஒன்று என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சந்துருஜி பதுங்கி இருக்கும் இடம் தெரிய வந்துள்ளதாக தெரிவித்த சிபிசிஐடி அவரை கைது செய்யாமல் தாமதம் செய்ததால் ஏற்கனவே பிடிபட்டவர்களும் ஜாமீனில் வெளியே வரும் நிலையை உருவாக்கி விட்டதாக பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றனர். குற்றவாளிகளுக்கு சாதகமான நடவடிக்கையில் ஈடுபடும் வகையிலே சந்துருஜியின் பேஸ்புக் உரையாடல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் தற்போது பொதுமக்களிடம் எழுந்துள்ளது. இதனால் இவ்வழக்கை அரசு உடனடியாக சிபிஐக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென அனைத்து தரப்பினரும் வலியுறுத்த தொடங்கி விட்டனர்.இதற்கிடையே முக்கிய குற்றவாளியான சந்துருஜி இவ்வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்டுள்ளார். அந்த மனு விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கு முன்ஜாமீன் கிடைக்கும்பட்சத்தில் அது, புதுச்சேரி காவல்துறையின் தோல்வியை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துவிடும் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...