×

மும்பையில் இருந்து 10 ஆயிரம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் விரைவில் மதுரை வருகை

மதுரை, ஜூன் 20: மதுரை பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் பயன்படுத்த 10 ஆயிரம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் மும்பையில் இருந்து விரைவில் மதுரை கொண்டு வரப்பட உள்ளன. பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. தற்போது தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தற்போது கையிருப்பில் உள்ள மின்னணு வாக்கு இயந்திரம் குறித்த தகவலை தேர்தல் ஆணையம் சேகரித்து வருகிறது. அதற்காக ஆன்லைன் மூலம் மின்னணு வாக்கு இயந்திரத்தின் நம்பர் உள்ளிட்ட விபரத்தினை ஸ்கேன் செய்தவுடன் அது இணையதளம் மூலமாக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் ஆகி வருகிறது.  

மதுரை மாவட்டத்தில் மதுரை பாராளுமன்ற தொகுதி, விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திருமங்கலம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிகளும், தேனி பாராளுமன்ற தொகுதியில், உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய சட்டமன்ற தொகுதிகளும் அடங்கியுள்ளன. 3 எம்பி தொகுதிகளுக்கான தேர்தல் மதுரை மாவட்டத்தில் நடைபெறும். தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்கு இயந்திரம் விபரம் கடந்த வாரம் தேர்தல் ஆணையத்திற்கு ஆன்லைன் மூலம்  அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்டத்தில் ஆயிரத்து 680க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் இருப்பதால், அதற்கு ஏற்ப மின்னணு வாக்கு இயந்திரத்தை வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதற்காக மும்பையில் உள்ள  6 ஆயிரத்து 500 மின்னணு வாக்கு இயந்திரங்கள், 4 ஆயிரம் கட்டுப்பாடு இயந்திரங்கள் மதுரை கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக வருவாய்த்துறையில் தாசில்தார் தலைமையில் ஒரு குழுவினர் மும்பை சென்று விரைவில் கொண்டு வரவுள்ளனர்.  இந்த மின்னணு இயந்திரங்கள் வாக்காளர் எந்த சின்னத்திற்கு வாக்களித்தார் என்பதை உடனே தெரிந்துகொள்ளும் (விவிபேட்) மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஆகும். மதுரை பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடியிலும் விவிபேட் மின்னணு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட்...