×

மற்றொரு காரை கொண்டு வந்து நிறுத்தினர் ஜப்தி தகவலால் கலெக்டர் காருடன் டிரைவர் ஓட்டம்: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

வேலூர், ஜூன் 19: வேலூர் கலெக்டரின் கார் ஜப்தி செய்யப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து கலெக்டர் காருடன் டிரைவர் ஓட்டம் பிடித்தார். அதற்கு பதில் அவசர அவசரமாக மற்றொரு காரை கொண்டு வந்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று வழக்கம்போல் நடந்து கொண்டிருந்தது. அதேபோல் அந்த வளாகத்தில் உள்ள அனைத்துத்துறை அலுவலகங்களும் வழக்கமான சுறுசுறுப்புடன் செயல்பட தொடங்கியது. இந்நிலையில் காலை 10 மணியளவில் கலெக்டர் ராமன் காரை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த கார் டிரைவர் உடனடியாக காரில் கலெக்டர் என்று எழுதியிருக்கும் பலகையை துணியால் மூடினார். மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து காரை எடுத்துச் சென்றுவிட்டார். அதற்கு பதிலாக அவசர அவசரமாக வேறொரு கார் வரவழைக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. ஆனால், வெகு நேரமாகியும் கோர்ட் ஊழியர்கள் யாரும் ஜப்தி செய்ய வரவில்லை. சுமார் ஒரு மணிநேரத்துக்கு பிறகு கார் ஜப்தி நடவடிக்கை தொடர்பாக எந்த உத்தரவும் இல்லை என்பதை ஊழியர்கள் உறுதிப்படுத்திக் கொண்டனர். இதையடுத்து கலெக்டரின் கார் மதியம் 1 மணியளவில் மீண்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, ‘ஆற்காடு அருகே நிலம் கையெடுப்பு விவகாரத்தில் உரிய இழப்பீடு வழங்காததால், கலெக்டர் கார் ஜப்தி செய்யப்படுவதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது ஜப்தி செய்யப்படுவதாக யாரோ வதந்தி கிளப்பியது தெரியவந்தது’ என்றனர்.
வேலூர் கலெக்டர் கார் ஜப்தி செய்யப்படுவதாக கிளம்பிய வதந்தியால் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED பள்ளி மாணவன் கடத்தலா? போலீசார் விசாரணை