நன்றி குங்குமம் டாக்டர்
சிலருக்கு உடலில் கை, கால், தோள்பட்டை, முதுகுப்பகுதி போன்ற இடங்களில் சிறு சிறு கட்டிகள் தோன்றும். இவற்றை கொழுப்புக் கட்டி (லிப்போமா) என்பார்கள். வலியில்லாத ஒன்று முதல் பத்திருபது கட்டிகளாக இவை உருவாகக்கூடும். இந்த கொழுப்புக்கட்டிகள் ஏன் உருவாகின்றன. இது என்னவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது குறித்து விளக்குகிறார் பொது நல மருத்துவர் அமிழ்தன்.
கொழுப்புக்கட்டிகள் என்றால் என்ன?
கொழுப்பு செல்கள் அதிகமாக வளர்ந்து ஒரு கட்டி போல் திரண்டுவிடுவதுதான் கொழுப்பு கட்டி. இது பொதுவாக, தோலுக்கும் தசைக்கும் இடையில் வளரும். மிக மிக மெதுவாகவே வளரும். மென்மையாகவும் உருண்டையாகவும் இருக்கும். கையால் தொட்டால் நகரக்கூடியதாகவும் இருக்கும். அதிகமாக அழுத்தினாலும் வலி இருக்காது. உடலில் எங்கு வேண்டுமானாலும் கொழுப்புக் கட்டிகள் தோன்றலாம். எனினும் கழுத்து, முதுகு, வயிறு, தொடைகள், கைகள், தோள்கள் ஆகிய இடங்களில் இவை அதிகம் ஏற்படுகின்றன.
ஒருவருக்கு ஒரு கட்டி மட்டும் வளரலாம் அல்லது ஒரே சமயத்தில் பல கட்டிகளும் வளரலாம். கொழுப்புக் கட்டி வளர்வதற்கான சரியான, தெளிவான காரணம் இன்றுவரை உறுதிப்படவில்லை என்றாலும் இது ஒரு பரம்பரை நோயாக பார்க்கப்படுகிறது. அதாவது, தாத்தாவுக்கோ, அப்பாவுக்கோ இருந்தால் மகனுக்கும் வர வாய்ப்புள்ளது. மற்றபடி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதிகக் கொழுப்புள்ள உணவைச் சாப்பிடுவது, உடல் பருமன், சர்க்கரை நோய், மது அருந்துதல் போன்றவை இக்கட்டிகள் வளர்ச்சியைத் தூண்டுகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன.
கொழுப்புக் கட்டியால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
கொழுப்புக் கட்டியினால் பெரியளவில் பாதிப்பு இருக்காது. சிலருக்கு உடலில் 10, 20லிருந்து 100 வரைகூட சிறு சிறு கட்டிகளாகத் திரண்டு இருக்கும். இந்தக் கட்டிகள் சிறியளவிலேயே இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. அதுவே சற்று பெரிதாக வளர்ந்தால் அல்லது நரம்பு பக்கத்தில் வளர்கிறது என்றால் அது நரம்பை அழுத்தும்போது வலி ஏற்படும். அப்படி வலி ஏற்படுத்தும் கட்டிகளுக்குதான் சிகிச்சை தேவை.
வலியில்லாத கட்டிகளுக்கு பயம் தேவையில்லை. கொழுப்புக் கட்டி ஒருபோதும் சீழ்க்கட்டிகளாக ஆகாது. கொழுப்புக்கட்டி புற்றுநோய்க் கட்டிகளாகவும் மாறாது. அதனால் பயப்படத் தேவையில்லை. அதே சமயம், கட்டி திடீரென வேகமாக வளர்கிறது, அதன் வடிவம் மாறுகிறது, வலிக்கிறது, கட்டியின் மேல் பகுதி சருமத்தின் நிறம் மாறுகிறது, கட்டி உடலுக்குள் ஊடுருவிச் செல்கிறது, கட்டிக்கு அருகில் உள்ள பகுதியில் நெறி கட்டுகிறது என்பது போன்ற அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அது புற்றுநோய்க் கட்டியா, இல்லையா எனப் பரிசோதித்துத் தெரிந்து, அதற்கேற்பச் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
சில நேரம் முதுகு தண்டுவடத்தில் இந்தக் கொழுப்புக்கட்டி வளரும். அப்படி வளர்ந்தால், அது காலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, முதுகு தண்டுவடத்தில் வளரும் கட்டிகளை அறுவைசிகிச்சை மூலம் அகற்றிவிடுவது நல்லது. சில நேரம் சதைப்பகுதிக்குள்ளே கொழுப்புக்கட்டி வளரும். அந்த கட்டிகள் மிகுந்த வலியைக் கொடுக்கும். அந்த மாதிரி கட்டிகளையும் அறுவைசிகிச்சை மூலம் அகற்றிவிடலாம்.
கொழுப்புக்கட்டியின் வகைகள்
கொழுப்புக்கட்டியில் பொதுவாக இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று கேப்ஸூலேட்டட் லிபோமா (encapsulated lipoma) மற்றொன்று டிப்யூஸ் லிபோமா (diffuse lipoma).கேப்ஸூலேட்டட் லிபோமா என்பது கொழுப்புக்கட்டியை சுற்றி ஒரு பை போன்று இருக்கும். தொட்டுப்பார்த்தால் உருளையாக இருக்கும்.
டிப்யூஸ் லிபோமா என்பது தொட்டுப்பார்த்தால் ரொம்ப பெரிதாக இருக்கும். அதைச்சுற்றி உள்ள முனைகள் அளவிட முடியாமல் பரவி இருப்பது போன்று தோன்றும்.
இதில் கொழுப்புக்கட்டி எங்கே வருகிறது என்பதை பொருத்து அதன் வகைகள் இருக்கும். ஒருவருக்கு தோலுக்கு கொஞ்சம் கீழே இருந்தால், சப்க்யூடினியஸ் லிபோமா (subcutaneous lipoma) என்று சொல்வோம்.
சதைப்பகுதியில் இருந்தால், இன்ட்ரா மஸ்குலர் லிபோமா (intra muscular lipoma) என்று சொல்வோம்.சில, முதுகுத் தண்டுவடத்தில் இருக்கும். அதை இன்ட்ரா ஸ்பைனல் லிபோமா ( Intra spinal lipoma) என்று சொல்லுவோம். சில கொழுப்புக் கட்டிகள் மூளையில்கூட உருவாகும். இதுபோன்று நிறைய வகையான கொழுப்புக்கட்டிகள் இருக்கின்றன.
மூளைக் கொழுப்புக்கட்டி ஆபத்தை ஏற்படுத்துமா
மூளையில் கொழுப்புக்கட்டி வந்தால் அதுசற்று ஆபத்துதான். உடனே கண்டுபிடித்து அறுவைசிகிச்சை மூலம் நீக்கிவிடுவது மிகவும் நல்லது. இல்லாவிடில், அது நாளடையில் உடலில் சோர்வை ஏற்படுத்தி பலவீனமாக்கிவிடுவதுடன் பல பிரச்னைகளையும் தோற்றுவிக்கும்.
சிகிச்சை முறை
முதுகுத் தண்டுவடம் அல்லது மூளைக்குள் ஏற்படும் கட்டிகளை அறுவைசிகிச்சை மூலம் அகற்றுவது ஒன்றுதான் ஒரே வழி. சிலருக்கு ஒரே இடத்தில் சிறியளவில் நிறைய கட்டிகள் இருக்கும். அவற்றை அறுவைசிகிச்சை செய்தால் தோலில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதற்காகவே, தற்போது ஊசியின் மூலம் நீக்குவதையே கடைப்பிடிக்கப்படுகிறது. லைப்போலைசிஸ் என்ற ஊசியின் மூலம் கொழுப்புக் கட்டிகளை கரைத்துவிட முடியும்.
அதுபோன்று ஒருமுறை சிகிச்சை எடுத்துக் கொண்டால் மீண்டும் அதே இடத்தில் கட்டி வருவதற்கு வாய்ப்பு மிக குறைவு. ஆனால், வேறு இடத்தில் மீண்டும் உருவாகலாம். அதுமாதிரி உடலில் உள்ளகொழுப்புக்கும், கொழுப்புக்கட்டி வருவதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
உணவுமுறை
ஓமேகா 3 கொழுப்பு அதிகம் உள்ள மீன் எண்ணெய் மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் கொழுப்புக்கட்டி கரைவதாக சிலர் கூறுகின்றனர். சிலர், மஞ்சள் சாப்பிட்டு வந்தால் கட்டியின் அளவு சற்று குறைவதாகவும் கூறுகிறார்கள். ஆனால் இவை எதுவும் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து அறிவிக்கப்படவில்லை.
தடுக்க… தவிர்க்க!
இளம்வயது பெண் பிள்ளைகள் பலருக்கும் அக்குள் பகுதியில் வரும் கட்டிகள் கொழுப்புக் கட்டி வகையைச் சார்ந்தது இல்லை. நிறையபேர் இதனை கொழுப்புக்கட்டி என்று தவறுதலாக புரிந்துகொள்கிறார்கள். இது கொழுப்புக்கட்டி இல்லை. முகத்தில் சிறு கட்டிகள் தோன்றினால் பரு என்கிறோம் அல்லவா அதுபோன்று தான் இதுவும். பரு வகையைச் சார்ந்ததுதான். அக்குள் பகுதியில் வந்தால் ஹிட்ரடெனிடிஸ் சுப்ரேட்டிவா (hidradenitis suppurativa) என்று சொல்கிறோம்.
அக்குள் பகுதியில் வேக்ஸிங் அல்லது ஷேவ் சரியாக செய்யாமல் இன்பெக்சன் ஆனால் இதுபோன்று கட்டிகள் வரும். அதுவே ட்ரீம் செய்து கொண்டால் கட்டிகள் வர வாய்ப்பில்லை. அதுபோன்று அக்குள் பகுதியை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த வகை கட்டிகளும் சிறிதாக இருக்கும்போதே சிகிச்சை எடுத்துக் கொண்டால், மருந்து மூலம் கரைத்துவிடலாம். அதுவே வளர்ந்து விட்டால் அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்ற முடியும்.
தொகுப்பு : ஸ்ரீதேவி குமரேசன்
