×

நெல்லை - திருச்செந்தூர் வழித்தடத்தில் 4 ரயில் நிலைய நடைமேடைகளை நீட்டிக்க திட்டம்

*மின்மயமாக்கலை தொடர்ந்து மேம்பாட்டு பணிகள் தீவிரம்

நெல்லை : நெல்லை - திருச்செந்தூர் வழித்தடத்தில் 4 ரயில் நிலையங்களில் நடைமேடைகளை நீட்டிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இவ்வழித்தடத்தில் இரு தினங்களாக மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்த கட்டமாக மேம்பாட்டு பணிகளும் தீவிரப்படுத்தப்பட உள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பழமையான வழித்தடங்களில் ஒன்றான நெல்லை- திருச்செந்தூர் வழித்தடத்தில் 4 பயணிகள் ரயிலும், 2 எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவ்வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் முடிந்தன. இரு தினங்களுக்கு முன்பு அனைத்து ரயில்களும் மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று(1ம் தேதி) முதல் செந்தூர், பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில்கள் வேகமாக இயக்கப்பட உள்ளன. இந்நிலையில் இவ்வழித்தடத்தில் உள்ள நடைமேடைகளை நீட்டிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. மதுரை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட நெல்லை - திருச்செந்தூர் வழித்தடத்தில் பாளையங்கோட்டை, தாதன்குளம், ஆழ்வார்திருநகரி, கச்சனாவிளை உள்ளிட்ட  நான்கு ரயில் நிலையங்கள் மற்றும், சிவகங்கை, உச்சிப்புளி, மண்டபம், எழுகோன் ஆகியவற்றையும் சேர்த்து மொத்தம எட்டு ரயில் நிலையங்களின்  நடைமேடைகளின் நீளத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான டெண்டரும் விடப்பட்டுள்ளது.

 நெல்லை - திருச்செந்தூர்  ரயில் வழித்தடத்தில்  குரும்பூர், காயல்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் 405 மீ நீளம் கொண்ட ஒற்றை நடைமேடையும், செய்துங்கநல்லூர், திருவைகுண்டம், நாசரேத் ஆகியவற்றில் 405மீ நீளம் கொண்ட இருநடை மேடைகளும், பாளையங்கோட்டை, தாதன்குளம், கச்சனாவிளை ஆகியவற்றில் 270 மீ கொண்ட ஒற்றை நடைமேடைகளும், ஆழ்வார்திருநகரியில் 210மீ நீளம் கொண்ட ஒற்றை நடைமேடையும் உள்ளன.
ஆறுமுகநேரியில் முறையே 555, 405 மீ கொண்ட இரு பயணிகள் நடைமேடைகளும், ஒரு குட்ஸ் நடைமேடையும்,  திருச்செந்தூரில் 550 மீ உள்ள ஒரு நடைமேடை,  340 மீ கொண்ட இருநடை மேடைகள்,  45 மீ கொண்ட ஒரு விஐபி லைன் ஆகியவை உள்ளது. இந்நிலையில் தெற்கு ரயில்வே தலைமை திட்ட மேலாளர் வெளியிட்டுள்ள டெண்டரில்  ரூ.3.85 கோடி தோராய மதிப்பீட்டில் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட  8 ரயில் நிலையங்களின் நடைமேடைகளை நீட்டிக்க அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகள் 6 மாதங்களில் முடிக்கப்பட உள்ளது.

அதன்படி, நெல்லை - திருச்செந்தூர் வழித்தடத்தில் பாளையங்கோட்டை, ஆழ்வார் திருநகரி, கச்சனாவிளை, தாதன்குளம் ரயில் நிலையங்களின் நடைமேடைகளை 270 மீட்டரில் இருந்து 405 மீட்டர் நீளம் வரை நீட்டிக்க வாய்ப்பு உள்ளது.   அதாவது 18 பெட்டிகள் நிறுத்தும் அளவிற்கு நடைமேடை நீட்டிக்கப்பட உள்ளது. 24 ஐ.சி.எப்  பெட்டிகள் மற்றும் 22 பெட்டிகள் கொண்ட எல்எச்பி ரயில்கள் நிறுத்துவதற்கு  540 மீ நீளம் கொண்ட நடைமேடைகள் தேவையாகும். நெல்லை ரயில் நிலையத்தில்  மட்டுமே  நெல்லை - திருச்செந்தூர் வழித்தடத்தில் 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நடைமேடை நீளம் உள்ளது. எனவே இவ்வழித்தடத்தில்  நடைமேடைகளின்  நீளத்தை மேலும் நீட்டித்தால் மட்டுமே கூடுதல் ரயில் பெட்டிகள்  இணைத்து இயக்க முடியும் என பயணிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பயணிகள்  கூறுகையில், ‘‘தற்போது நெல்லை - திருச்செந்தூர்   வழித்தடத்தில், அதிகபட்சமாக செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஐசிஎப் 18 பெட்டிகளுடனும்,  மற்ற ரயில்கள் 12 பெட்டிகள் மட்டுமே கொண்டு இயக்கப்பட்டு வருகின்றன.

கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் திருச்செந்தூர் - நெல்லை  வழித்தடங்களில் உள்ள  முக்கிய கிராஸிங் நிலையங்களான ஆறுமுகநேரி, நாசரேத், திருவைகுண்டம், செய்துங்கநல்லூர் நடைமேடைகளின் நீளத்தை 540 மீ வரை உடனடியாக நீட்டிக்க வேண்டும். ஏற்கனவே செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
எனவே உடனடியாக மக்கள் பிரதிநிதிகள் தெற்கு ரயில்வேக்கு அழுத்தம் கொடுத்து திருச்செந்தூர் - நெல்லை வழித்தடத்தின் நடைமேடைகளின் நீளத்தை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவிற்கு அதிகரிக்க வேண்டும்.’’ என்றனர்.

Tags : Paddy - Thiruchendur , நெல்லை,திருச்செந்தூர், நடைமேடை, ரயில் நிலைய நடைமேடை, மின்சார ரயில்கள்
× RELATED சின்னாபின்னமாகி கிடக்கும்...