×

சின்னாபின்னமாகி கிடக்கும் நெல்லை-திருச்செந்தூர் சாலை: வாகன பயணம் நேரம் அதிகரிப்பு

நெல்லை: வடகிழக்கு பருவமழையால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. குறிப்பாக நெல்லை-திருச்செந்தூர் இடையே உள்ள 55 கிலோ மீட்டர் சாலை மற்றும் திருச்செந்தூர் நகர சாலைகள் கடுமையாக சேதடைந்துள்ளன. செய்துங்கநல்லூர், குரும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் பல இடங்களில் பெரிய அளவில் பள்ளங்கள் தோன்றியுள்ளன. சில இடங்களில் சாலைகள் ஓரளவு நல்ல நிலையில் இருப்பதால் சிறிது தூரம் வேகமாக செல்லும் வாகனங்கள் அடுத்து திடீரென காணப்படும் எதிர்பாராத பள்ளங்களில் இறங்கி கட்டுபாட்டை இழந்து தடுமாறும் நிலை ஏற்படுகிறது. இரவு நேரங்களில் சாலை பள்ளங்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் பயணம் செல்வதற்கு கடும் அச்சம் ஏற்படுகிறது. இதுபோல் மழை பெய்யும் போது இந்த சாலை பள்ளங்களில் நீர் நிரம்பியிருப்பதால் மேலும் சிக்கலை ஏற்படுத்துகிறது.

நெல்லை-திருச்செந்தூர் மிக முக்கிய சாலையாக உள்ளது. இந்த வழியாக தினமும் திருச்செந்தூர் கோயிலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள், கார்களில் செல்கின்றனர். தற்போது சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் திருச்செந்தூர் நோக்கி 24 மணி நேரமும் சென்று திரும்புகின்றன. வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் சேதமடைந்த சாலை விபரம் தெரியாமல் வேகமாக சென்று விபத்துக்களில் சிக்குகின்றனர். பல இடங்களில் பள்ளங்களில் வாகனங்கள் சிக்கி பழுதாகி நிற்கின்றன. சில இடங்களில் உள்ள சேதப்பகுதியை கடக்க நீண்ட நேரம் ஆவதால் இருபுறங்களிலும் வாகனங்கள் தேங்கும் நிலை ஏற்படுகிறது. தற்போது ஏராளமான முருக பக்தர்கள் சிறிய அளவிலான ரதங்களை இழுத்தபடி நடந்து செல்கின்றனர். சேதமடைந்த சாலைகளில் இவர்கள் ரதங்களுடன் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இரவில் நடந்து செல்பவர்கள் வாகன ஓட்டிகளின் கண்களுக்கு கடைசி நேரத்தில் தென்படுவதால் இருதரப்பினருக்கும் மேலும் சிக்கல் ஏற்படுகிறது. 55 கிலோ மீட்டர் தூர சாலையில் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்துள்ளதுடன் திருச்செந்தூர் நகர பகுதியில் உள்ள சாலைகளும் படுமோசமாக சேதமாகியுள்ளன. இதனால் சுற்றுலாவரும் வாகனங்கள் திருச்செந்தூர் நகர பகுதி சாலைகளில் தடுமாறி பயணிக்கின்றன. சாலை சேதத்தால் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு கார், பஸ் பயண நேரம் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து இரண்டேகால் மணி நேரத்திற்கும் அதிகமாகியுள்ளது. வாகனங்கள் மட்டுமின்றி பாதயாத்திரையாக செல்லும் முருக பக்தர்களும் சாலை சேதத்தால் சிரமப்படுகின்றனர். சாலை சேதத்திற்காக வாகனங்கள் சாலை ஓரம் வருவதால் இரவில் நடந்து செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு சங்கடம் ஏற்படுகிறது.

அடுத்து வரும் நாட்களில் தைப்பூசம் வரை அதிகளவில் முருகபக்தர்கள் இந்த சாலையில் பாதயாத்திரை செல்ல வாய்ப்புள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் தாமதமின்றி நெல்லை-திருச்செந்தூர் சாலையை முழுமையாக சீரமைக்கவேண்டும். மேலும் திருச்செந்தூர் நகர பகுதியில் உள்ள சாலைகளை பேரூராட்சி நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்களும் பக்தர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Paddy-Thiruchendur Road ,Paddy-Thiruchendur , Paddy-Thiruchendur Road, Chinnappinam
× RELATED நெல்லை - திருச்செந்தூர் வழித்தடத்தில்...