×

கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தொடர்பாக பவுன்டேஷன் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டு உறுதியானால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் உறுதி அளித்தார். தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவான்மியூர், கலாஷேத்ரா பவுன்டேஷன் விவகாரம் குறித்து பதில் அளித்து பேசியதாவது: கலாஷேத்ரா பவுன்டேஷன் விவகாரம் குறித்து உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, வேல்முருகன், செல்வப்பெருந்தகை, ராமச்சந்திரன் ஆகியோர் அவையின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் இங்கே உரையாற்றியிருக்கிறார்கள். ஒன்றிய அரசினுடைய கலாச்சாரத் துறையின்கீழ் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய, கலாஷேத்ரா பவுன்டேஷன் விவகாரத்தைப் பொறுத்தவரைக்கும், தேசிய மகளிர் ஆணையம் முதலில் தானாக முன்வந்து பாலியல் தொல்லை என டிவிட்டர் செய்தி போட்டு, கடந்த மாதம் 21ம் தேதியன்று நடவடிக்கை எடுக்கக் கோரி டி.ஜி.பிக்கு கடிதம் எழுதியது.

இதுதொடர்பாக, காவல் துறைத் தலைவரை கலாஷேத்ரா பவுன்டேஷன் இயக்குநர், சந்தித்து, தங்களது நிறுவனத்தில் பாலியல் புகார் ஏதும் இல்லை என்று தெரிவித்தார். பிறகு தேசிய மகளிர் ஆணையமே “நாங்கள் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி அடிப்படையில் அவ்வாறு விசாரித்தோம், அந்த விசாரணையை முடித்து வைத்து விட்டோம்” என கடந்த மாதம் 25ம் தேதியன்று டி.ஜி.பிக்கு கடிதம் எழுதி தெரிவித்திருக்கிறார்கள். இதன் பின்னர், கடந்த 29ம் தேதி மீண்டும் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவரே வந்து கலாஷேத்ராவில் இருக்கக்கூடிய 210 மாணவிகளிடம் விசாரித்து விட்டுச் சென்றுள்ளார். அப்போது காவல் துறை தங்களுடன் வரத் தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் காவல் துறைக்கு இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் ஏதும் கிடைக்கப் பெறவில்லை.

இந்நிலையில், மாணவிகள் நடத்திய உள்ளிருப்புப் போராட்டத்தின் விளைவாக, கலாஷேத்ரா பவுன்டேஷனில் உள்ள கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, விடுதிகளை விட்டு மாணவிகள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டவுடன், மாவட்ட ஆட்சித் தலைவரோடு தொடர்பு கொண்டு, விவரங்களை அறிந்தேன். இந்த விஷயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக மேலும் விவரங்களை அறிவதற்காக, வருவாய்க் கோட்ட அலுவலர், வட்டாட்சியர், காவல் இணை ஆணையர், துணை ஆணையர் மற்றும் அலுவலர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டார்கள்.

வருவாய்த் துறை மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் அங்கு சென்று, மாணவிகள் மற்றும் நிர்வாகத்தினருடன் பேசினர். மேலும், அங்குள்ள மாணவிகளின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, அங்கு ஒரு பெண் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அரசைப் பொறுத்தவரை, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டு உறுதியானால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

* கடந்த 29ம் தேதி தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவரே கலாஷேத்ராவில் 210 மாணவிகளிடம் விசாரித்து விட்டுச் சென்றுள்ளார். இந்த விவகாரத்தில் காவல் துறைக்கு இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் ஏதும் வரவில்லை.
* கலாஷேத்ரா பவுன்டேஷன் விஷயத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக மேலும் விவரங்களை அறிய, வருவாய் கோட்ட அலுவலர், வட்டாட்சியர், காவல் இணை ஆணையர், துணை ஆணையர் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
* வருவாய், காவல்துறை உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அங்கு சென்று, மாணவிகள் மற்றும் நிர்வாகத்தினருடன் பேசி பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, பெண் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Tags : Kalashetra ,Chief Minister ,M. K. Stalin , Legal action against those guilty of sexual harassment of Kalashetra girls: Chief Minister M. K. Stalin assured
× RELATED வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும்...