×

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.. 57.1% பேர் பாஜக ஆட்சி மீது கோபத்தில் உள்ளதாக கருத்து கணிப்பில் தகவல்!!

பெங்களூரு : சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்று ABP-Cvoter இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரட்டை இன்ஜின் முழக்கத்தை முன்வைத்து கர்நாடகாவில் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கி விட்ட நிலையில், முதற்கட்ட கருத்து கணிப்பு முடிவுகள் பாஜகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து ABP-Cvoter சார்பில் நடைபெற்ற கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 115 முதல் 127 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

 ஆளும் பாஜகவிற்கு 68 முதல் 80 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்று கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. மதச் சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு 23 முதல் 35 இடங்கள் கிடைக்கும் என்று கருத்து கணிப்பு முடிவில் கூறப்பட்டுள்ளது. முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட வேண்டிய நபர் யார் என்பது குறித்த கருத்து கணிப்பில் முன்னாள் முதல்வர் சித்தராமைய்யாவுக்கு 39.1% ஆதரவு தெரிவித்துள்ளார். தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு 31.1% ஆதரவு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே. சிவக்குமாருக்கு 3.2% வாக்குகள் கிடைத்துள்ளன.

மஜக கட்சி தலைவர் குமாரசாமிக்கு 21.4% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போது உள்ள பாஜக ஆட்சிக்கு உள்ள செல்வாக்கு மீது எடுக்கப்பட்ட வாக்கெடுப்பு அக்கட்சிக்கு அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது. 50.5% பேர் பாஜக ஆட்சி மோசமாக இருப்பதாக கூறியுள்ளனர். 27.7% பேர் பாஜக ஆட்சி சிறப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் 57.1%பேர் பாஜக ஆட்சி மீது கோபத்தில் உள்ளதாகவும் ஆட்சியை மாற்ற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். முதல்வர் பசவராஜ் பொம்மையின் செயல்பாடு மோசமாக உள்ளதாக 46.9% பேர் தெரிவித்துள்ளனர். 26.8% பேர் பசவராஜ் பொம்மை சிறப்பாக செயல்படுவதாக கூறியுள்ளனர். 


Tags : Congress ,Karnataka ,BJP government , Karnataka, Congress, Government, BJP
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு