×

தொல்லியல் துறை அனுமதி, மண்டலக்குழு அனுமதி, மாநிலக் குழு அனுமதி பெற்று 16 பணிகள் ரூ.5.5 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன: தமிழ்நாடு சட்டபேரவையில் உறுப்பினர்கள் கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (29.03.2023) வினா - விடை நேரத்தின்போது திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.வி.செழியன், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கே.பொன்னுசாமி, கோவை (வடக்கு) சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுனன், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி, ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா  ஆகியோர் எழுப்பிய வினாக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு விடையளித்தார்.

அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது:
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர், துக்காச்சி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்திட பாலாலயம் நடைபெற்று, அதோடு அப்பணிகள் நிறுத்தப்பட்டிருந்த சூழ்நிலையில் இதுகுறித்து உறுப்பினர் கவனத்திற்கு கொண்டு வந்தவுடன் கடந்த 11.05.2022 அன்று அதற்குரிய தொல்லியல் துறை அனுமதி, மண்டலக்குழு அனுமதி, மாநிலக் குழு அனுமதி பெற்று 16 பணிகள் ரூ.5.5 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்தாண்டு கார்த்திகை மாதத்திற்குள் அந்த திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்பதை பேரவை தலைவர் வாயிலாக மகிழ்ச்சியோடு உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் கோ.வி.செழியன்: கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற வார்த்தைக்கேற்ப கேள்வி எழுப்புவதற்கு முன்பாகவே கார்த்திகை மாதத்துக்குள் குடமுழுக்கு நடைபெறும் என அறிவித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும், தமிழ்நாடு முதலமைச்சருகும் நன்றி. திருவிடைமருதூர் தொகுதி, துக்காச்சியில் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விக்கிரம சோழன் காலத்தில் கட்டப்பட்டது.  எப்பொழுது குடமுழுக்கு நடந்தது என்ற விவரமே இல்லாமல் சிதிலடைந்த திருக்கோயிலை ஊர் மக்கள் மற்றும் எங்களுடைய கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சர் தீவிர முயற்சியால் இன்றைக்கு புனரமைக்கப்பட்டு பக்தர்களாலும் அருளாளர்களாலும் நன்கொடை பெறப்பட்டு பணி நிறைவாக நடந்து கொண்டு வருகிறது.

அந்த திருக்கோயிலானது தமிழனின் கட்டிடக்கலையும், சோழர் கால கட்டிடக்கலையும் சிறப்புற விளக்குகின்ற கோயில். அதோடு சோழர்கால கல்வெட்டுகள் மிகவும் சிதிலமடைந்து உள்ளது. சிதிலமடைந்ததையெல்லாம் சரி செய்கின்ற நமது தமிழ்நாடு முதலமைச்சர் துக்காச்சி திருக்கோயிலில் இருக்கக்கூடிய சிதிலமடைந்த கல்வெட்டுகளை சரி செய்து நல்லதொரு நாளில் விரைவில் குடமுழுக்கு நடத்த அரசு முன்வருமா என்பதை  கோருகிறேன்.  

அமைச்சர்: குடமுழுக்கை பற்றி ஒரு சிறிய குறிப்பு. கடந்த 20-ந் தேதி நிதிநிலை அறிக்கை  தாக்கல் செய்தபோது, 574 திருக்கோயில்கள் இதுவரை குடமுழுக்கு நடைபெற்று உள்ளது என்று அறிவிக்கப்பட்டது. 20 ந் தேதிக்கு பிறகு தற்போது வரையில் 615 திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. 10 நாட்களில் 41 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்தேறி இருக்கின்ற ஆட்சி தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இருக்கின்ற ஆட்சி. ஆகவே உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று கல்வெட்டுகளும் சரி செய்யப்படும் குடமுழுக்கும் விரைவில் நடத்தி தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்பு பேசிய உறுப்பினர் சொன்னார் பனிமலை அந்த மலை என்று. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் இந்த ஆதவனை யாராலும் மறைக்க முடியாது என்பதை பேரவை தலைவர் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்

சட்டமன்ற உறுப்பினர் கோ.வி.செழியன்: திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் சூரிய பகவானுக்குரிய சூரியனார் கோயில், சுக்கிர பகவானுக்குரிய கஞ்சனூர் திருக்கோயில்,  திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி திருக்கோயில், திருநாகேஸ்வரம் ராகு தலம், தென்திருப்பதி என்று சொல்லப்படுகின்ற ஒப்பிலியப்பன் கோயில் உள்ளிட்ட திருத்தலங்கள் இருக்கிறது. ஆனால் பக்தர்கள் தங்கி செல்வதற்கு வசதியான, பாதுகாப்பான இல்லம் இல்லை. எனவே இல்லை என்று சொல்லும் மனம் இல்லாமல் அள்ளிக் கொடுக்கின்ற நமது முதலமைச்சர் அமைச்சரூடன் அமைச்சர் கலந்து பேசி கூடிய விரைவில் திருவிடைமருதூர் தொகுதியில் பக்தர்கள் தங்கி செல்வதற்கான தங்கும் விடுதிகள் அமைத்து தருவார்களா என அறிய விரும்புகிறேன்.

அமைச்சர்:  நம்முடைய உறுப்பினர் அவர்கள் கேட்ட கேள்வியை ஒட்டித்தான் நாகநாதசாமி திருக்கோயில், வெங்கடாஜலபதி திருக்கோயில், சுவாமிமலை திருக்கோயில் அமைந்திருக்கின்றன. இந்த மூன்று திருக்கோயில்களுக்கும் ஏற்கனவே பக்தர்கள் தங்கும் விடுதிகள் இருக்கின்றன. 2021 - 22 -ல் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு நாகநாத சுவாமி திருக்கோயிலுக்கு கூடுதலாக ரூ. 3.20 கோடி செலவில் அளவிலே பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கூட பக்தர்களுடைய கோரிக்கை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் துரை சந்திரசேகரன் போன்றோரின் கோரிக்கை ஏற்று முதலமைச்சரின் உத்தரவை பெற்று நாகநாத சுவாமி திருக்கோயிலுக்கு மேலும் ரூ.8.90 கோடி செலவில் கூடுதலாக பக்தர்கள் தங்கும் விடுதியை இந்த ஆண்டு கட்டுவதற்கு உத்தேசித்துள்ளோம்.

ஆகவே திருவிடைமருதூர் திருக்கோயிலைச் சார்ந்த இந்த திருக்கோயில்களில் அமைந்திருக்கின்ற பக்தர்கள் தங்கும் தங்கும் விடுதி அனைத்துமே 5 கிலோ மீட்டர், 2 கிலோ மீட்டர் என்ற சுற்றளவில் தான் இருக்கின்றது. தேவை என்றால் குடமுழுக்கு முடிந்த பிறகு  அங்கு இருக்கின்ற இடத்தை பொறுத்து உறுப்பினரின் கோரிக்கையை நிறைவேற்றுவோம்.

சட்டமன்ற உறுப்பினர் கே.பொன்னுசாமி: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி சட்டமன்ற தொகுதியில் அருள்மிகு தத்தகிரி முருகன் கோயில் உள்ளது. அந்த ஆலயத்திற்கு மாண்புமிகு கலைஞருடைய ஆட்சி காலத்தில் 2008 ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. சுமார் 14 ஆண்டுகள் ஆகியும் குடமுழுக்கு விழா நடைபெறவில்லை. ஆகவே அமைச்சர் இந்த ஆண்டு இக்கோயிலுக்கு குடமுழுக்கு நடப்பதற்கு ஆவண செய்யுமாறு பேரவை தலைவர் வாயிலாக அமைச்சர் அவர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அமைச்சர்:  நாமக்கல் மாவட்டம், தத்தகிரி  முருகன் கோயிலுக்கு குடமுழுக்கு நடைபெற்று 14 ஆண்டுகள் ஆகிறது.  குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் முடிவுற்ற அனைத்து திருக்கோயில்களுக்கும் திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், 1,000 கோடி ரூபாய் செலவில் 1,500 திருக்கோயில்களுக்கு திருப்பணி என்று அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, இந்த திருக்கோயில் தற்போது மண்டல குழுவினுடைய உத்தரவு பெற்று, மாநில குழுவிற்கு ஒப்புதல் பெற அனுப்பப்பட்டுள்ளது. மாநிலக் குழுவின் ஒப்புதல் பெற்றவுடன் வரைபடம்  தயாரிக்கப்பட்டு வெகு விரைவில் திருப்பணிக்கு இந்த திருக்கோயில் எடுத்துக் கொள்ளப்படும்.  

சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுனன்: கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட மருதமலை முருகன் கோவிலுக்கு கடந்த ஆட்சியில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராக இருந்த போது ஒப்பந்தம் கோரப்பட்டு பூமி பூஜைகளும் போடப்பட்டன. ஆனால் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. அந்தப் பணிகள் எப்போது தொடங்கும் என்பதை தங்கள் வாயிலாக அமைச்சரை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

அமைச்சர்:  படைக்கு அஞ்சா எங்களுடைய படை தளபதியின் ஆட்சியிலே நீங்கள் ஆரம்பித்து விட்டு சென்ற பணியில் கூட தற்போது ஒப்பந்தம் கோரப்பட்டு, நிறைவுற்று இன்னும் 4 அல்லது 5 தினங்களில் முதலமைச்சரின்  திருக்கரங்களால் மருதமலை முருகன் கோயிலுக்கு தானியங்கி (லிப்ட்) அமைக்கப்படும் என்பதை பேரவை தலைவர் வாயிலாக தெரிவித்துக் கொள்வதோடு, ஒப்பந்தம் கோரப்பட்டவுடன் பூமி பூஜை  எப்படி போட முடியும், இப்படிப்பட்ட விந்தை எல்லாம் கடந்த காலங்களில் தான் நடந்தேறி இருக்கின்றது ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட பிறகு தான் பூமி பூஜை போடப்படும் என்பதை பேரவை தலைவர் வாயிலாக உறுப்பினருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட வடிவீஸ்வரம் அருள்மிகு இடர் தீர்த்த பெருமாள் திருக்கோவிலுக்கு கும்பாபிஷேகத்தை அமைச்சர் செய்து தருவாரா என்பதை தாங்கள் மூலமாக கேட்டுக்கொள்கிறேன்.

அமைச்சர்: கேளாமல் தருகின்ற மனம், கேட்டதெல்லாம் தருகின்ற குணம் எங்களுடைய தமிழ்நாடு முதலமைச்சரின் குணம் என்பதற்கு எடுத்துக்காட்டாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான திருக்கோயில்களில் ஒரு கோயிலுக்கு 15 லட்சம் என்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த 100 கோயில்களுக்கும் பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 28 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்று இருக்கின்றது. இப்படி 100 கோயில்களை குடமுழுக்கு செய்கின்ற இந்த ஆட்சியில் உறுப்பினர் எம். ஆர். காந்தி கேட்ட  வடிவீஸ்வரம் கோயிலுக்காக குடமுழுக்கு நடத்தி தரமாட்டோம் என்றா நாங்கள் மறுக்கப் போகிறோம். இன்னார் இனியவர் என்று பார்க்காமல் எல்லோருக்கும் திருப்பணிகளை செய்து தர உத்தரவிட்ட முதலமைச்சரின் ஆட்சியில் நிச்சயம் நீங்கள் கூறிய இந்த திருப்பணி நிறைவேற்றி தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன்: ஆலங்குளம் தொகுதி, கடையம் ஒன்றியம் பாப்பான்குளத்தில் அமைந்திருக்கின்ற  அழகம்மை சமேத கருத்தீஸ்வரன் திருக்கோயில்  உள்ளது. பழமை வாய்ந்த இக்கோயில் பல ஆண்டுகளாக  பராமரிக்கப்படாமல் அதே நேரத்தில் கும்பாபிஷேகமும் நடைபெறாமல் இருக்கின்றது. சுமார் 50 கிராமங்களிலிருந்து அந்த கோயிலுக்கு திருமணங்கள் நடத்தி செல்வதற்கு மக்கள் அங்கு வந்து செல்கின்ற கோயிலாகும். அமைச்சர் அந்த கோயிலை புனரமைப்பதற்கும், கும்பாபிஷேகம் நடத்துவதற்கும், அங்கு ஒரு அழகிய திருமண மண்டபத்தை கட்டுவதற்கும் நடவடிக்கை எடுப்பார்களா என்பதை தங்கள் வாயிலாக கோருகிறேன்.  

அமைச்சர்:  இக்கோயில் திருப்பணிகள் தொடர்பாக கடந்த 13.09.2022 அன்று தொல்லியல் வல்லுனர்களுடைய கருத்துரு பெறப்பட்டிருக்கின்றது. இதன் பிறகு மண்டல வல்லுநர் குழு, மாநில வல்லுனர் குழு கருத்துருக்கள் பெறப்பட்டு நிச்சயமாக அந்த திருக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திருக்கோயில் சதுர்வேதி மன்னர் காலத்தில் கட்டப்பட்டது.  இதில் ஒரு சிறப்பு வாய்ந்த அம்சம் என்னவென்றால் 64 ஆயக்கலைகளையும் ஒருங்கிணைந்த அம்மன் அந்த சன்னிதானத்தில் வீற்றிருக்கின்றாள். அதற்காகவே இந்த திருக்கோயிலை புனரமைக்கும் வகையில் திருப்பணிக்கு உடனடியாக எடுத்துக் கொள்ளப்படும் என்பதை உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு திருக்கோவிலில் குடமுழுக்கு முடிந்த பிறகு நீங்கள் கோரிய திருமண மண்டபம் அமைப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உத்தரவு பெற்ற பிறகு அதுவும் உரிய கால அளவில் செய்து தரப்படும் என்பதை பேரவை தலைவர் வாயிலாக உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா: சென்னையின் மையப் பகுதியான கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த குறுங்காலீஸ்வரர் கோயிலுக்கு உட்பட்ட வைகுண்ட பெருமாள் கோயில் கோபுரம் மொட்டை கோபுரமாக இருக்கிறது. அதை ஐந்து நிலை கோபுரமாக மாற்றி தரப்படுமா? திராவிட முன்னேற்றக் கழகத்தின் நம்பர் ஒன் முதலமைச்சர், 1500 கோடி கோவில் சொத்துக்களை மீட்டெடுத்த முதலமைச்சர் இந்த கோயிலுக்கு திருத்தேர் வழங்குவாரா என்று தங்கள் வாயிலாக கேட்டு அறிகிறேன்.

அமைச்சர்: அருள்மிகு குறுங்காலீஸ்வரர் கோயிலுக்கு ஏற்கனவே கல் மண்டபம் இருக்கின்றது. புதிதாக ஐந்து நிலை ராஜகோபுரம் ரூபாய் 50 லட்சம் செலவில் கட்டித் தருவதற்கு உபயதாரர் ஒருவர் இசைவு தந்திருக்கின்றார். இன்னும் ஓரிரு மாதங்களில் அதற்கு உண்டான உத்தரவை வழங்கி நிச்சயமாக உறுப்பினர் கோரிய ஐந்து நிலை ராஜகோபுரம்  ஏற்படுத்தப்படும் தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு தான் 2021 - 2022,  2022 - 2023 ஆகிய ஆண்டுகளில் சுமார் 31 திருத்தேர்கள் புதிதாக செய்வதற்கு ரூபாய் 18 கோடி ஒதுக்கீடு செய்து தந்தார். இந்த திருக்கோயிலுக்கும் இரண்டு தேர்களை உறுப்பினர் கோரி இருக்கின்றார். அந்த திருக்கோவிலில் ஏற்கனவே 6 கோடி ரூபாய் அளவிற்கு வைப்பு நிதி உள்ளது என்ற காரணத்தினால் இந்த திருத்தேர்களை செய்கின்ற பணியும் முதலமைச்சர் உத்தரவு பெற்று இந்த ஆண்டு அந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதை பேரவை தலைவர் வாயிலாக உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என நிறைவு பெற்றது.


Tags : Minister ,Seagarbabu ,Tamil Nadu Legislative Assembly , Archeology Department Permission, Zonal Committee Permission, State Committee Permission, Tamil Nadu Legislative Assembly, Minister Shekhar Babu Answer
× RELATED கன்னியாகுமரி இரையுமன்துறை மீன்...