×

காலிறுதியில் ரைபாகினா: காயத்தால் விலகினார் பியான்கா

மயாமி: அமெரிக்காவில் நடக்கும் மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, கஜகஸ்தானின் எலனா ரைபாகினா தகுதி பெற்றார். 4வது சுற்றில் பெல்ஜியம் வீராங்கனை எலிஸ் மெர்டன்ஸுடன் மோதிய ரைபாகினா 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 46 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு 4வது சுற்றில் எகடரினா அலெக்சாண்ட்ரோவாவுடன் மோதிய கனடா நட்சத்திரம் பியான்கா ஆண்ட்ரீஸ்கு 6-7 (0-7) என முதல் செட்டை இழந்து பின்தங்கினார். இரண்டாவது செட்டில் அவர் 2-0 என முன்னிலை வகித்தபோது காயம் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாமல் போட்டியில் இருந்து விலகினார்.

செக் குடியரசின் பெத்ரா குவித்தோவா (33 வயது, 12வது ரேங்க்) தனது 4வது சுற்றில் 7-5, 7-6 (7-5) என்ற நேர் செட்களில் கடுமையாகப் போராடி வர்வரா கிரச்சேவாவை (ரஷ்யா) வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 1 நிமிடத்துக்கு நீடித்தது. முன்னணி வீராங்கனைகள் அரினா சபலெங்கா (பெலாரஸ்),  சொரானா சிர்ஸ்டியா (ருமேனியா), ஜெஸ்ஸிகா பெகுலா (அமெரிக்கா), அனஸ்டேசியா போதபோவா (ரஷ்யா), மார்டினா டிரெவிசான் (இத்தாலி) ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.



Tags : Rybakina ,Bianca , Rybakina in the quarterfinals: Bianca withdraws with injury
× RELATED சில்லி பாய்ன்ட்…