×

கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் வட்டாரங்களில் மழையால் பாதிக்கப்பட்ட வயல்களில் கள ஆய்வு

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் வட்டாரங்களில் மழையால் பாதிக்கப் பட்ட வயல்களில் வேளாண்மை இணை இயக்குனர் மேற்பார்வையில், வேளாண் அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு காலை மற்றும் மாலை நேரங்களில் மழை பெய்து வருகின்றது. மீஞ்சூர்  மற்றும் கும்மிடிப்பூண்டி வட்டாரங்களில் பலத்த மழை பெய்ததன் காரணமாக வயல்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. மீஞ்சூர் மற்றும் கும்மிடிப்பூண்டி வட்டாரங்களில் மழையினால் பாதிக்கப்பட்ட வயல்களை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் மேற்பார்வையில், வெளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) வேதவல்லி, திரூர் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி முனைவர் சிவகாமி, வேளாண்மை உதவி இயக்குநர் டில்லிபாபு ஆகியோர் அடங்கிய குழு கள ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கினர்.

தற்போது மீஞ்சூர் மற்றும் கும்மிடிப்பூண்டி வட்டாரங்களில் நெல் 1,340 ஹெக்டர் பரப்பளவு, பயறுவகைகள் 4,655 ஹெக்டர் பரப்பளவு, எண்ணெய்வித்து பயிர்கள் 1,484 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக மீஞ்சூர் வட்டாரத்தில் உள்ள சேலியம்பெடு, உமிப்பேடு, ஈஞ்சூர், மெதூர் மற்றும் கங்காணிமேடு கிராமங்களிலும், கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் குருவி அகரம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட பச்சைப்பயிறு மற்றும் எள் வயல்களை பார்வையிட்டனர். மழையினால் சூழ்ந்துள்ள வயல்களில் உரிய வாடிக்கால் வசதி செய்து நீரை வெளியேற்ற வேண்டும் என்றும், எள் மற்றும் பச்சைப் பயறு பயிர்களில் இடைவெளி  30 செ.மீ. முதல் 10 செ.மீ. உள்ளவாறு பராமரிக்கவும், மாங்கனி சல்பேட்  2 கிலே ஏக்கர் மணல் கலந்து வயலில் தூவவும், பயிர் வளர்ச்சி அதிகரிக்க எள் பயிரில் விதைத்த 35ம் நாள் நுணி கிள்ளவும், தற்போது  நிலவி வரும் சூழ்நிலையில்  பூச்சி நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளதால்  உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறும் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

பின்னர் சின்னகாவனம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.  பின் அங்கு விவசாய இடுபொருட்கள், விதைகள், பண்ணைக் கருவிகள் மற்றும் உரங்கள்  இருப்பு ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.  மேலும் விவசாயிகள் தொழில் நுட்பம் சம்பந்தமான தகவல்களுக்கு அருகாமையில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தினை அனுகுமாறு வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.


Tags : Kummidipoondi ,Meenjur , Kummidipoondi, Meenjoor, rain, affected field, field survey
× RELATED இன்னொரு முறை பாஜ ஜெயித்தால் தேர்தல்...