×

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.1 கோடி ஒதுக்கீடு பள்ளி மாணவர்களுக்கு மாலையில் ஸ்நாக்ஸ் வழங்கும் புதிய திட்டம்: மேயர் பிரியா அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாலையில் ஸ்நாக்ஸ் வழங்கும் திட்டத்திற்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக, மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் கடைசியாக 2016ம் ஆண்டு தாக்கலானது. அதன் பிறகு மாநகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல், நேரடி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில், மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டு, சென்னை மாநகராட்சி மேயராக பிரியா தேர்வு செய்யப்பட்டார். மேயராக பதவியேற்ற குறுகிய காலகட்டத்திலேயே 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மேயர் பிரியா தாக்கல் செய்தார்.

கடந்த பட்ஜெட்டில் காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவுபடுத்துதல், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட 67 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இவற்றில் பெரும்பாலான பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. ஒரு சில பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர், ரிப்பன் மாளிகை கட்டிடத்தின் கூட்ட அரங்கில், நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் பிரியா பட்ஜெட்டில் 83 அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:

* சென்னை உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் செய்முறை வகுப்புகளை சிறப்பான முறையில் நடத்திட ஆய்வகங்களில் உட்கட்டமைப்புகள் படிப்படியாக மேம்படுத்தப்படும். முதல் கட்டமாக 2023-24ம் கல்வியாண்டில் முன்னுரிமையின் அடிப்படையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் 10 மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும். சென்னை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் முக்கியமான அறிவிப்புகளை அறிவிக்கவும், பள்ளியின் அனைத்து பகுதிகளையும் உடனடியாக தொடர்பு கொள்வதற்கு வசதியாக சென்னை மாநகராட்சியின் அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு தளத்திலும் பொது அறிவிப்பு முறை (பப்ளிக் அட்ரஸ் சிஸ்டம்) அமைக்கப்படும். முதல் கட்டமாக ரூ.35 லட்சம் செலவில் 70 பொது அறிவிப்பு முறை அமைத்து தரப்படும். இத்திட்டம் படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்.

* மாணவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க அனைத்து மண்டலங்களிலும் ஆலோசகர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இதற்காக ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்படும். சென்னைப் பள்ளிகளில் இசை ஆசிரியர்கள் உள்ள 20 பள்ளிகளுக்கு ஸ்ருதி பெட்டி, மின்கலன்களால் இயக்கப்படும் ஸ்ருதி பெட்டி, ஆர்மோனியம், தாளம் மற்றும் மராக்கஸ் குச்சிகள் போன்ற இசைக்கருவிகள் ஒரு பள்ளிக்கு ரூ.25,000 வீதம் 20 பள்ளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும். அனைத்து சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் தானியங்கி மணி ரூ.27.17 லட்சம் மதிப்பீட்டில் அமைத்து தரப்படும். அனைத்து பள்ளிகளில் மாதிரி ஐக்கிய நாடு குழு அமைக்கப்படும். மாலை நேர சிறப்பு வகுப்பு பயிலும் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மாலை ஸ்நாக்ஸ் வழங்கப்படும். சிறப்பு வகுப்பு மற்றும் குறைதீர் கற்பித்தல் வகுப்பில் பங்கேற்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜனவரி மாதம் முதல் தேர்வு முடியும் (ஏப்ரல் மாதம்) வரை மாலையில் ஸ்நாக்ஸ் (அவித்த சுண்டல் அல்லது பயிறு வகைகள்) ரூ.1 கோடி செலவில் வழங்கப்படும்.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களின் பங்களிப்புடன் இணையதள வசதியுடன் ஸ்மார்ட் வகுப்புகள், தேவைப்படும் பள்ளிகளில் அமைக்கப்படும். 10 மற்றும் 12ம் வகுப்புகளில் 100 சதவீத தேர்ச்சி ஏற்படுத்தும் ஆசிரியர்களுக்கு, இதுவரை ரூ.1,500 ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்த கல்வியாண்டில் ஊக்கத்தொகை ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். அதிகபட்சம் 400 ஆசிரியர்களுக்கு ரூ.12 லட்சம் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி ஏற்படுத்திய ஆசிரியர்களை விடுமுறை நாட்களில், கல்விச் சுற்றுலாவாக நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர். இதற்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்துப் சென்னைப் பள்ளிகளுக்கும் ரூ.6.27 லட்சம் செலவில் முதலுதவி பெட்டிகள் வழங்கப்படும். சென்னை பள்ளிகளில், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வரவும், நாள் முழுவதும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கவும், முதல் பாட வேலையின் போது 10 நிமிடம் தினமும் மகிழ்ச்சியான வகுப்புகள் நடத்தப்படும். இவ்வகுப்பில் மாணவர்களுக்கு நன்நெறிப்பண்புகள் கற்பிக்கப்படும். பள்ளி செல்லும் மாணவர்களையும், பொதுமக்களையும் ஈர்க்கும் வகையில், அனைத்து சென்னை மாநகரப் பள்ளிகளின் முகப்பிலும் தனித்துவம் வாய்ந்த சென்னைப் பள்ளிகளுக்கான சின்னம் (லோகோ) அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் அனைவரையும் 4 குழுக்களாக அமைத்து அந்த குழுக்களுக்கு அரக்கு, பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய 4 வண்ணங்களில் 28,200 மாணவர்களுக்கு ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் டி.சர்ட் வழங்கப்படும். சென்னை பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் பள்ளி கல்விக்குப் பின் அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நிகழ்வாக தொழிற்சாலைகளை பார்வையிடுவதற்கு ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். சென்னைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களில் கற்றலில் பின் தங்கியுள்ள மாணவர்கள் டியூசன் செல்லாமல் அவர்களுக்கு, புகழ் பெற்ற ஆசிரியர்கள் மூலம் இணையதளம் வழியாக நான் முதல்வன் என்ற திட்டத்தின் கீழ் கற்றல் பயிற்சி வழங்கப்படும்.

* மக்களை தேடி மேயர் திட்டம்

மக்களை தேடி மேயர் திட்டம் இந்த நிதியாண்டு முதல் செயல்படுத்தப்படும் என மேயர் பிரியா தெரிவித்தார். சென்னை மாநகராட்சி மண்டலம் 1 முதல் 15 வரையுள்ள பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குறைகளை களையும் பொருட்டு, மாநகராட்சி மேயர் மாதத்திற்கு ஒரு முறை ஏதேனும் ஒரு வட்டார அலுவலகத்தில் மனுக்களை நேரடியாக பெறும் வகையில் மக்களை தேடி மேயர் திட்டம் 2023-24ம் நிதியாண்டு முதல் செயல்படுத்தப்படும், என்று மேயர் தெரிவித்துள்ளார்.

* உயர்க்கல்வி கட்டணம் இலவசம்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்து மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்று ஜே.இ.இ., நீட் போன்ற தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அதன்மூலம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஐ.ஐ.டி., எம்.எம்.சி, எய்ம்ஸ் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் இலவசம். இந்த கல்வி கட்டணத்தை சென்னை மாநகராட்சியே செலுத்திவிடும். இதுதொடர்பாக தனியாக வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும்.


*மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி

திருக்குறளுடன் அதற்கான விளக்கமும்  நாள்தோறும் காலை இறைவணக்கக் கூட்டத்தில் மாணவர்களை கூற வைத்து தமிழ் பேசும்  திறனை மேம்படுத்தும் திட்டம் இந்த கல்வியாண்டு முதல்  நடைமுறைப்படுத்தப்படும். ஒவ்வொரு புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்  நடைபெறும் காலை இறைவணக்கக் கூட்டத்தை ஆங்கிலத்தில் நிகழ்த்த அனைத்து  மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் வாய்ப்பினை வழங்கி மாணவர்கள்  ஆங்கிலத்தில் பேசும் புலமையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், தலைமை  பண்பையும் உயர்த்த வழிவகை செய்யப்படும். மேலும், ஆங்கிலப் பாட வேளையில்,  கற்பிக்கும் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் இரண்டு மாணவர்களை ஏதேனும் பொது  தலைப்பில் 2 நிமிடங்கள் ஆங்கிலத்தில் பேச வைப்பதை நடைமுறைப்படுத்தி சுழற்சி  முறையில் ஆங்கிலத்தில் பேசும் புலமையை உயர்த்த வழிவகை செய்யப்படும்.

* புதிதாக இணைக்கப்பட்ட பள்ளிகளுக்கு ரூ.45 கோடி

சென்னை மாநகராட்சியுடன்  இணைக்கப்பட்டுள்ள 90 தொடக்கப்பள்ளிகள், 38 நடுநிலைப்பள்ளிகள், 8  உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 3 மேல்நிலைப்பள்ளிகள் உட்பட 139 பள்ளிகளும் ரூ.15  கோடி செலவில் அனைத்து விதமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும்,  இப்பள்ளிகளில் தூய்மைப் பணி ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். இந்த  பணிகளுக்காக மொத்தம் ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* பள்ளி சீரமைப்புக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு

பழுது ஏற்பட்டிருக்கும் சென்னை மாநகராட்சி பள்ளிக் கட்டிடங்களின் மேற்தளங்களை முன்னுரிமையின் அடிப்படையில், நவீன தொழில்நுட்பத்தின் மூலம், மறுசீரமைப்பது மற்றும் பள்ளிக் கட்டிடங்களின்  அனைத்து விதமான பராமரிப்பு பணிகளுக்காக இந்த கல்வியாண்டில் ரூ.25 கோடி  மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.


* 100/100 மதிப்பெண் எடுத்தால் தலா ரூ.10,000 ரொக்கப் பரிசு

சென்னைப் பள்ளிகளில் 12ம் வகுப்பு  அரசு பொதுத் தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100/100 மதிப்பெண் பெறும்  மாணவர்களுக்கு, தலா ரூ.10,000 வீதம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். சென்னைப்  பள்ளிகளில் பயின்று மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்று தேசிய அளவிலான  போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று, அதன் மூலம் தேசிய முக்கியத்துவம்  வாய்ந்த அரசு கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு அவர்களின் முதலாம்  ஆண்டு கல்விக் கட்டணம் சென்னை மாநகராட்சியால் வழங்கப்படும்.



Tags : Chennai Corporation ,Mayor ,Priya , Chennai Corporation Budget, Rs 1 Crore Allocation, School Student, Evening, Snacks, New Project, Mayor Priya, Announcement
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!