×

இரக்கம் காட்டிய தங்க விலை... சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.43,760க்கு விற்பனை.. இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதல்!!

சென்னை: தங்கம் விலை, கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது. கடந்த 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை சவரனுக்கு ரூ.1,880 வரை உயர்ந்து தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.43 ஆயிரத்தை கடந்தது. கடந்த 18ம் தேதி தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்வை கண்டது. கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,560க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,480க்கு விற்கப்பட்டது. இந்த விலை ஏற்றம் நகை வாங்குவோருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் தங்கம் விலை கடந்த 10ம் தேதி முதல் 18ம் தேதி வரை, அதாவது தொடர்ந்து 9 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,960 உயர்ந்தது. இந்த வாரத்தின் தொடக்கத்திலும் சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.44,640க்கு விற்பனையானது. தங்கம் இனி காட்சி பொருளாக மாறி விடுமோ என்று மக்கள் நினைக்க தொடங்கினர். ஆனால் நேற்றைய தினத்தில் தங்க விலை சற்று குறைந்தது. சவரன் ரூ. 80 குறைந்து ரூ.44,560க்கு விற்பனையானது.

இந்த நிலையில் இன்றும் தங்க விலை சரிவை கண்டுள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.43,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.5,470க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 70 காசுகள் உயர்ந்து ரூ.74 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்க விலையில் இன்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் சற்று நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.



Tags : Savaran , Gold, Price, Sawaran, Sale
× RELATED சென்னை ராயபுரத்தில் பாதுகாப்பு கருதி...