×

செப்டம்பர் 15 முதல் மகளிருக்கு ரூ.1000: மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி கடன்; பத்திர பதிவு கட்டணம் 2 சதவீதமாக குறைப்பு: தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு

* 1000 புதிய பஸ்கள் வாங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
* ரூ.1000 கோடியில் வடசென்னை வளர்ச்சி திட்டம்
* சென்னை அண்ணாசாலையில் 4 வழி மேம்பாலம்
* மதுரை, கோவையில் மெட்ரோ ரயில்
* தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம்

சென்னை: தமிழ்நாடு அரசின் 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது, செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 4 வழி மேம்பாலம், சென்னையில் உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரம், நிலம் வாங்குபவர்களுக்கு பதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். தமிழகத்தில் 2021ம் ஆண்டு மே மாதம், திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வரானார்.

இதையடுத்து ஆகஸ்ட் மாதம் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதல் காகிதமில்லா பட்ஜெட்டாகவும் அது அமைந்தது. அதைத்தொடர்ந்து இரண்டாவதாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18ம் தேதி 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், கடந்த ஜனவரி 9ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, சில நாட்கள் பேரவை நடைபெற்றது. இந்நிலையில், தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு திருக்குறள் வாசித்து கூட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது, தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதி ஆண்டுக்கான, பொது பட்ஜெட்டை சட்டசபையில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். அவர், தாக்கல் செய்யும் மூன்றாவது இ-பட்ஜெட் இதுவாகும்.

தமிழகத்தின் 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதி அமைச்சர் தியாகராஜன் பேசியதாவது: மாநிலத்தின் இந்த ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை மதிப்பீடுகளை, பேரவையில் முன்வைக்கிறேன். தமிழ்நாட்டு மக்களின் நலனையும், நல் வாழ்வையும் இரு கண்களாக கருதி, பல இடர்பாடுகளுக்கு இடையே நமது மாநிலத்தை பொறுப்புணர்வுடன் வழிநடத்தி வரும் நமது முதல்வர் மு.க.ஸ்டாலினின் தலைமை பண்பை எடுத்து கூறும், காலத்தால்
அழியாத திருக்குறளான ‘‘கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி’’ என்பவதை நினைவு கூர்ந்து, எனது உரையை தொடங்குகிறேன்.

பொருளாதர வளர்ச்சியை உயர்த்துதல், சமூக பாதுகாப்பை வலுப்படுத்துதல், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குதல், கல்வியின் மூலம் பெண்களின் வாழ்வாதார மேம்பாடு, விளிம்பு நிலை மக்களின் சமூக பொருளாதாரத்தை உயர்த்துதல், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் மூலம் வறுமை ஒழிப்பு, தரவுகள் அடிப்படையிலான நிர்வாகத்தின் மூலம் அரசின் திட்டங்கள் பொதுமக்களை முழுமையாக சென்றடைவதை உறுதி செய்தல், சுற்றுச்சூழல் நீடித்த நிலைத்த தன்மையையும் தலைமுறைகளுக்கு இடையேயான சமத்துவத்தையும் உறுதி செய்தல், இவை அனைத்திலும் நடப்பாண்டில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை கண்டுள்ளோம்.

இந்த சாதனைகளை நாம் கொண்டாடும் அதே வேளையில், வரலாறு காணாத பணவீக்கம், உக்ரைனில் தொடரும் போர், உலக பொருளாதாரத்திலும், நிதி சந்தையிலும் நிலவும் நிச்சயமற்ற நிலை போன்ற பல சவால்களை வரும் நிதியாண்டில் நாம் எதிர்நோக்கியுள்ளோம். தேசிய அளவோடு ஒப்பிட்டு பார்க்கையில் நமது மாநிலத்தில், கடந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சியை எய்துள்ளோம். வருவாய் மற்றும் நிதி பற்றாக்குறையை ஒன்றியை அரசை விட, கணிசமாக குறைத்துள்ளோம். இது முதல்வரின் தலைமை பண்புக்கும் திறன் மிக்க நிதிமேலாண்மைக்கும் சான்றாகும்.

கடந்த 2 ஆண்டுகளாக அதிக செலவுள்ள பல நலத்திட்டங்களை செயல்படுத்தியபோதும், முன் எப்போதும் இல்லாத அளவில் பல கடினமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, நாங்கள் பதவி ஏற்கும்போது சுமார் ரூ.62 ஆயிரம் கோடி இருந்த வருவாய் பற்றாக்குறையை நடப்பு ஆண்டில், திருத்த மதிப்பீடுகளில் சுமார் 30 ஆயிரம் கோடி அளவுக்கு குறைத்துள்ளோம். இது கொரோனா தொற்றுக்கு பிந்தைய 2019-20ம் ஆண்டு பற்றாக்குறையை ஒப்பிட்டாலும் ஏறத்தாழ ரூ.5 ஆயிரம் கோடி குறைவாகும் என்றார்.

தொடர்ந்து நிதி அமைச்சர் 2023-2024ம் ஆண்டு பட்ஜெட் உரையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அது வருமாறு:
*வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்கள்,  591 பேருக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும்.
* சங்கமம் கலை விழா வரும் ஆண்டில் மேலும் 8 முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும். மாநிலம் முழுவதும் 25 பகுதி நேர நாட்டுப்புற கலைப்பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
* தஞ்சாவூர் ‘மாபெரும் சோழர் அருங்காட்சியகம்’ ஒன்று அமைக்கப்படும்.
* போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளின்போது உயிர்த்தியாகம் செய்த தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தில் வழங்கப்படும். கருணைத்தொகை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
* கலைஞர் நூற்றாண்டு நூலகம் வரும் ஜூன் மாதம் முதல் வாசகர்களை வரவேற்கும்.
* சென்னையில் ஓர் உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரத்தை அரசு அமைக்கும்.
* ரூ.25 கோடியில் சென்னை ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கம் சீரமைக்கப்படும்.
* முதலமைச்சரின் காலை உணவு திட்டம், வரும் கல்வி ஆண்டு முதல் 30,122 அரசு தொடக்க பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும். இதன்மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்கள். இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* கோவையில் உலகத்தரம் வாய்ந்த செம்மொழிப்பூங்கா 2 கட்டங்களாக 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.172 ேகாடி செலவில் அமைக்கப்படும்.
*மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி கடன்.
* ரூ.1000 கோடியில் வடசென்னை வளர்ச்சி திட்டம்.
* சென்னையில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணாசாலையில் ரூ.621 கோடி மதிப்பீட்டில் நான்கு வழி மேம்பாலம் கட்டப்படும்.
* 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். 500 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும். இதற்காக ரூ.500 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
* கோயம்புத்தூரின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு அங்கு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி அவிநாசி சாலை, சத்தியமங்கலம் சாலைகளை உள்ளடக்கி ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
* மதுரை, தென்னகத்தின் வளர்ச்சிக்கு மையமாக விளங்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
* உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 10, 11ம் தேதி சென்னையில் நடத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* நிலம் வாங்குபவர்களின் சுமையை குறைக்க பதிவு கட்டணத்தை 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.
* சமூகத்தின் சரிபாதியான பெண்ணினத்தை - சரிநிகர் சமமாக உயர்த்த திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது திராவிட மாடல் அரசு. கல்வியில், நிர்வாகத்தில், அதிகாரம் மிக்க பொறுப்புகளில், பொருளாதாரத்தில், சமூகத்தில் பெண்களை உயர்த்தும் திட்டங்களை திமுக அரசு அமையும் போதெல்லாம் தீட்டி செயல்படுத்தி வருகிறோம். மகளிருக்கு சொத்துரிமையும், உள்ளாட்சி அமைப்புகளில் தனி இடஒதுக்கீடும் அளித்தது முதல், இன்று அவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கியது வரை, மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம். அந்த வரிசையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று நாங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளோம். மக்களை தேடி மருத்துவம், புதுமைப்பெண், நான் முதல்வன் போன்றவை தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாதவை. இத்தகைய  புதுமையான திட்டங்களை செயல்படுத்தியுள்ள முதல்வர், மகளிருக்கு உரிமைத் தொகை தரப்படும் என்ற இந்த வாக்குறுதியையும் உறுதியாக நிறைவேற்றிட வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார். அதன் அடிப்படையில், தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்ப தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது. ஒன்றிய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்கு பேருதவியாக இருக்கும்.
முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில்,  அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15ம் நாள் முதல் இத்திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் மகளிர் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாட்டு மகளிரின் சமூக பொருளாதார வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்திற்காக, இந்த வரவு-செலவு திட்டத்தில் 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* எதிர்க்கட்சி வரிசையில் உட்கார சென்ற அமைச்சர் பொன்முடியால் சிரிப்பொலி
சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க காலை 9.51 மணிக்கு உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கு பேரவைக்குள் வந்தார். அப்போது அவர், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இருக்கும் பகுதி வழியாக வராமல் எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் வரும் வழியாக பேரவைக்குள் வந்தார். பின்னர் எதிர்க்கட்சி தலைவர்கள் இருக்கும் முதல் வரிசையில், பாஜ சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் இருக்கை அருகே சென்று அமர முயற்சி செய்தார். இதை எதிர் வரிசையில் இருந்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கவனித்து, அமைச்சர் பொன்முடியிடம் தகவல் தெரிவித்தனர். அதன்பிறகு, தான் தன் தவறை உணர்ந்த பொன்முடி, உடனே சுதாரித்துக் கொண்டு சிரித்தவாறே அங்கிருந்து மீண்டும் ஆளுங்கட்சி வரிசையில் தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு சென்று அமர்ந்து கொண்டார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

* 2 மணி நேரம் பட்ஜெட் உரையாற்றிய அமைச்சர்
சட்டப்பேரவை நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. முன்னதாக காலை 9.30 மணி முதலே அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அவைக்கு வந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் 9.58 மணிக்கு வந்தார். அவருடன் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரை பதிவு செய்யப்பட்ட லேப்டாப்புடன் வந்தார். அப்போது திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மேஜையை தட்டி அவர்களை வரவேற்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். அப்போது எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் அவருக்கு பதிலுக்கு வணக்கம் தெரிவித்தனர். ஆனால், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மட்டும் வணக்கம் தெரிவிக்காமல் இருக்கையில் அமர்ந்து இருந்தார். நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சரியாக காலை 10.01 மணிக்கு பட்ஜெட் படிக்க ஆரம்பித்து, பிற்பகல் 12.03 மணிக்கு அதாவது சுமார் 2 மணி நேரம் பட்ஜெட் உரை படித்தார். கடைசியாக 5 நிமிடம் அவர் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

Tags : Tamil Nadu , Rs 1,000 per woman from September 15: Rs 30,000 crore loan to women self-help groups; Deed Registration Fee Cut to 2 Percent: Tamil Nadu Budget Announcement
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...