×

ரூ.32.62 கோடி மதிப்பில் விக்டோரியா பொது அரங்கத்தினை மறுசீரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினர் அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் விக்டோரியா பொது அரங்கத்தினை அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து, மறுசீரமைக்கும் பணியினை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள விக்டோரியா பொது அரங்கினை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து, மறுசீரமைக்கும் பணியினை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, அமைச்சர் பெருமக்கள் விக்டோரியா பொது அரங்கினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு பணிகள் குறித்த காணொலி காட்சியினைப் பார்வையிட்டனர்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். விக்டோரியா பொது அரங்கம் சென்னையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டடமாக திகழ்கின்றது. இக்கட்டடம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்தின் பேரரசி விக்டோரியாவின் பெயரால் பெயரிடப்பட்ட சிறப்பு வாய்ந்த கட்டடமாகும். மேலும், சென்னை மாநகரின் கட்டடக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும், விக்டோரியா ராணி ஆட்சியின் பொன் விழாவை நினைவு கூறும் வகையிலும் அமைக்கப்பட்ட இக்கட்டடம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

ராபர்ட் சிசோல்ம் என்பவரால் இந்தோ சாரசெனிக் கட்டடக்கலையில் நம்பெருமாள் செட்டியாரால் 1888ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்தக் கட்டடம் கட்ட திருவிதாங்கூர் மன்னர், மைசூர் மன்னர், புதுக்கோட்டை மன்னர், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் முத்துசாமி ஐயர், பி.ஆர். அண்டு சன்ஸ் கடிகார நிறுவனம், இராமநாதபுரம் மன்னர் பாஸ்கரசேதுபதி, எட்டையபுரம் சமீன்தார், ஹாஜி அப்துல் பச்சா சாஹிப் உள்ளிட்ட பலர் நன்கொடை வழங்கியுள்ளனர். இந்த அரங்கிற்கு மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர் போன்ற பல புகழ்பெற்ற நபர்கள் அரங்குக்கு வந்துள்ளனர். சுவாமி விவேகானந்தர், கோபால கிருஷ்ண இந்த கோகலே,சுப்பிரமணிய பாரதியார், சர்தார் வல்லபாய் படேல் போன்ற தேசியத் தலைவர்கள் இந்த அரங்கில் கூட்டங்களை நடத்தியுள்ளனர்.

தர்மவரம் இராமகிருஷ்ணமாச்சாரியலு போன்ற தெலுங்கு நாடக முன்னோடிகள், சங்கரதாஸ் சுவாமிகள்,பம்மல் சம்பந்த முதலியார் போன்ற தமிழ் நாடக முன்னோடிகள் தங்களது நாடகங்களை இங்கு நடத்தினர். சென்னையில் முதன்முதலில் திரைப்படம் திரையிடப்பட்டது இங்குதான். மெட்ராஸ் போட்டாகிராபிக் ஸ்டோரின் உரிமையாளரான டி. ஸ்டீவன்சன் என்பவர் பத்து குறும்படங்களைக் கொண்டு சில காட்சிகளை இங்கு திரையிட்டார்.

இரண்டு மாடி கொண்ட இக்கட்டடத்தின் நீளம் 48 மீட்டர், அகலம் 24 மீட்டர், பிரதானக் கூரையின் உயரம் 19 மீட்டர் மற்றும் மொத்த கோபுரத்தின் உயரம் 34 மீட்டர் ஆகும். தற்பொழுது இந்த விக்டோரியா பொது அரங்கின் முழுக் கட்டடத்தையும் அதன் தொன்மை மாறாமல் பழுது பார்க்கும் பணிகள், நில அதிர்வினை தாங்கும் வகையில் மறுசீரமைப்பு பணிகள், முழு கூரையினையும் மறுசீரமைப்பு செய்யும் பணிகள், வெளிப்புறம் மற்றும் உட்புறம் மரத்தளம் மற்றும் மரப்படிக்கட்டுகளுடன் மறுசீரமைப்பு செய்யும் பணிகள், ஏற்கனவே உள்ள கட்டடத்தை தற்போதைய பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மேம்படுத்துதல், கலைநயத்துடன் கூடிய முகப்பு விளக்குகள் அமைக்கும் பணி, இயற்கையை ரசிக்கும் வகையில் புல் தரைகள் அமைக்கும் பணி ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும், இந்தக் கட்டடத்தின் தரைத்தளத்தில் அருங்காட்சியகமும், அத்துடன் நிர்வாக அலுவலகமும் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது. முதல் தளத்தில் மிக முக்கிய பிரமுகர்களின் நிர்வாக இடமாகவும் மற்றும் கலாச்சார இடமாகவும் பயன்படுத்தப்படும். 2022-23ஆம் நிதியாண்டில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் விக்டோரியா பொது அரங்கினை புதுப்பித்து, மறுசீரமைக்கும் பணி தற்பொழுது நடைபெற உள்ளது. இப்பணியின் ஒப்பந்தக்காலம் 24 மாதங்கள் இக்கட்டடத்தின் மறுசீரமைப்பு பணிகள் முழுவதும் முடிந்து, அதன் பழமையான தொன்மை மாறாமல் மீண்டும் தமிழ்நாட்டின் ஒரு அழகான சின்னமான கட்டமைப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Tags : Ministers ,KN Nehru ,Udayanidhi Stalin ,Victoria Public Theater , Ministers KN Nehru, Udayanidhi Stalin laid the foundation stone for renovation of Victoria Public Theater at a cost of Rs 32.62 crore.
× RELATED திருத்தணியில் ஜவுளிப்பூங்கா அமைக்க...