×

தமிழகத்தில் 2,761 யானைகள் உட்பட நாட்டில் 29,964 யானைகள் உள்ளது: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: தமிழகத்தில் 2,761 யானைகள் உட்பட நாட்டில் 29,964 யானைகள் உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் யானைகள் எண்ணிக்கை தொடர்பான கேள்விக்கு அமைச்சர் அஷ்வினி குமாரி செளபே பதில் அளித்துள்ளார். 2019 - 2022 காலகட்டத்தில் 274 யானைகள் மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டில் 274 யானைகள் பல்வேறு காரணங்களால் பலியான நிலையில், யானைகளால்  1,579 மனிதர்கள் கொல்லப்பட்டதாக ஒன்றிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் ஒன்றிய, மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், மனித - வனவிலங்கு மோதல்களால் யானைகளின் உயிர் இழப்புகள் தொடர்ந்து கொண்டே உள்ளன. மின்சாரம், விஷம் வைத்தல் போன்றவற்றால் ஏராளமான யானைகள் உயிரிழந்துள்ளன.

ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, கடந்த 2019-20 முதல் 2021-22ம் ஆண்டுக்கு இடையில் நாடு முழுவதும் 198 யானைகள் மின்சாரம் தாக்கியும், 41 யானைகள் ரயில்கள் மோதியும், 27 யானைகள் வேட்டைக்காரர்களாலும், 8 யானைகள் விஷம் வைத்தும் கொல்லப்பட்டன.மொத்தம் 3 ஆண்டில் 274 யானைகள் பல்வேறு காரணங்களால் இறந்துள்ளன. அதேபோல் கடந்த மூன்று ஆண்டுகளில் 1,579 மனிதர்களை யானைகள் கொன்றுள்ளன.

கடந்த 2019-20-ம் ஆண்டில் 585 பேரும், 2020-21ம் ஆண்டில் 461 பேரும், 2021-22ம் ஆண்டில் 533 பேரும் இறந்துள்ளனர். மாநிலம் வாரியாக பார்க்கும் போது, ஒடிசாவில் அதிகபட்சமாக 322 பேரும், ஜார்க்கண்டில் 291 பேரும், மேற்கு வங்கத்தில் 240 பேரும், அசாமில் 229 பேரும், சட்டீஸ்கரில் 183 பேரும், தமிழகத்தில் 152 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 198 யானைகளில் அதிகபட்சமாக அசாமில் 36 யானைகளும், ஒடிசாவில் 30 யானைகளும், தமிழகத்தில் 29 யானைகளும் உயிரிழந்துள்ளன. ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, மனித - விலங்கு மோதல் குறித்து ஆராய்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் ஒன்றிய அரசுக்கு சில பரிந்துரைகள் வைக்கப்பட்டுள்ளன.


Tags : Tamil Nadu ,Union , There are 29,964 elephants in the country, including 2,761 in Tamil Nadu: Union Govt
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...