×

அண்ணாமலையார் கோயில் இடத்தில் பாஜ மாநில நிர்வாகி ஆக்கிரமித்து கட்டிய அடுக்குமாடி கட்டிடம் இடிப்பு: ரூ.30 கோடி மதிப்பு நிலம் மீட்பு

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, பாஜ மாநில நிர்வாகி கட்டியிருந்த அடுக்குமாடி கட்டிடத்தை அதிகாரிகள் இடித்து அகற்றி, ரூ.30 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்டனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான இடம் அம்மணி அம்மன் மடம் எனும் பெயரில் அமைந்துள்ளது. இங்கு பாஜவின் ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவர் சங்கர் , 23,800 சதுர அடி இடத்தை ஆக்கிரமித்து 2 அடுக்கு மாடி கட்டிடம் கட்டி குடியிருப்பதாகவும், அலுவலகம் நடத்தி வருவதாகவும் புகார் வந்தது.

இதை அகற்ற, இந்து சமய அறநிலையத்துறை  சார்பில் 2015 முதல்  தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதை எதிர்த்து பாஜ நிர்வாகி சங்கர், நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து கோயில் இணை ஆணையர் வே.குமரேசன் மற்றும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட்டனர். அதன் தொடர்ச்சியாக, அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன் கோபுரத்துக்கு எதிரில் அம்மணி அம்மன் மடத்தில், பாஜ நிர்வாகி கட்டியிருந்த 2 அடுக்கு மாடி கட்டிடம் நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் அதிரடியாக இடித்து அகற்றப்பட்டது.

மீட்கப்பட்ட இடத்தின் சந்தை மதிப்பு ரூ.30 கோடிக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் கோயிலுக்கு அருகில் உள்ள  மடத்துக்குள் 25க்கும் மேற்பட்ட சமையல் காஸ் சிலிண்டர்கள் இருந்ததால், அவற்றை போலீசார் பாதுகாப்பாக வேறு இடத்துக்கு மாற்றி னர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன், கோயில் இணை ஆணையர் குமரேசன், ஆர்டிஓ மந்தாகினி மற்றும் நகராட்சி அலுவலர்கள் மேற்பார்வையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மடம் இடிக்க எதிர்ப்பு: பழுதடைந்த அம்மணி அம்மன் மடத்தையும் இடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதற்கு  இந்து முன்னணி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இடிப்பு பணியை அதிகாரிகள் பாதியில் நிறுத்திவிட்டு சென்றனர்.


Tags : Baja ,Anamalayar , Demolition of apartment building occupied by BJP state executive on Annamalaiyar temple site: Rs 30 crore worth land recovery
× RELATED உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல்...