திருச்சுழி: ஒன்றிய அரசின் நிதி போதவில்லை என்பதால் பல்வேறு கிராமங்களிலும் கட்டப்பட்ட தனிநபர் கழிப்பறகைள் தற்போது பயன்பாடின்றி கிடக்கிறது. இதனால் இத்திட்டத்தின் நோக்கம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு தனி நபர் கழிப்பறை அமைக்க ரூ.50 ஆயிரம் வரை செலவாகும் நிலையில் ஒன்றிய அரசு ரூ.12 ஆயிரம் மட்டுமே வழங்குவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் கடந்த 8 ஆண்டுகளில் சுமார் 70 சதவீத வீடுகளில் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அரசின் மானிய திட்டம் காரணமாக ஏற்பட்ட அழுத்தங்களால் கட்டப்பட்ட இந்தக் கழிப்பறைகளை, மக்கள் தொடர்ந்து பயன்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திறந்தவெளி கழிப்பிடங்கள் குறித்து நாடு முழுவதும் மத்திய சுகாதாரத் துறை களப்பணி மேற்கொண்டு வருகிறது.
மாவட்டங்களில் உள்ள மக்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் திறந்தவெளி கழிப்பிடங்களைப் பயன்படுத்தி வருவதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 50 சதவீத குடும்பங்களில் கழிப்பறை இல்லை என புள்ளி விவரங்கள் தெரிவித்தாக கூறப்படுகின்றன. உலக சுகாதார நிறுவனம் கடந்த 2014ம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் 60 கோடி மக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஒன்றிய அரசு கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள கிராமப்புற வீடுகள் அனைத்தையும் கழிவறை வசதி உள்ள வீடுகளாக மாற்றும் பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தில் தனிநபர் இல்லக் கழிப்பறைகளைக்கட்ட ரூ. 12,000 மானியத்தை ஒன்றிய அரசு வழங்குகிறது.
திருச்சுழி பகுதியில் உள்ள பெரும்பாலன கிராமப்புற பள்ளிகளில் முறையான கழிப்பிட வசதிகள் செய்து தரப்படவில்லை.
போதுமான தண்ணீர் வசதியும் இருப்பதில்லை. கிராமங்களில் கட்டித் தரப்படுகின்ற தனிக் கழிப்பறைகளாகட்டும், பொதுக் கழிப்பறைகளாகட்டும் ஒப்புக்காகவும், கணக்குக் காட்டுவதற்காகவுமே கட்டித் தரப்படுகின்றன. தரமானவையாக கட்டித் தரப்படுவதில்லை. அவற்றிலும் நிரந்தரமான, போதுமான தண்ணீர் வசதிகள் இல்லை. தண்ணீர் வசதி இல்லாததால், அவற்றைப் பயன்படுத்துவதில் மக்களிடம் தயக்கம் ஏற்படுகிறது.
பல மாவட்டங்களில் சுமார் 50 சதவீதம் பேர் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதில்லை என்று தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தபட்ட திட்டமான ஒருங்கிணைந்த குழந்தைகள், மகளிர் சுகாதார வளாகங்கள் பெரும்பாலான கிராமங்களில் பூட்டியே வைக்கப்பட்டுள்ளன. இதன்படி 2019ம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது தனது லட்சியம் என ஒன்றிய அரசு 2014ம் ஆண்டில் அறிவித்தது. தனிநபர் கழிப்பறை கட்ட குறைந்தளவு நிதி ஒதுக்கப்படுவதால், பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் அவற்றை கட்ட முன்வருவதில்லை.
மேலும் அன்றைய அதிமுக ஆட்சியில், தமிழகத்தில் கிராமப்புறங்களில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் கட்டாயம் தனி நபர் இல்லக் கழிப்பறைகளைக் கட்ட வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து பணி வழங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்தனர். இதனால் கிராமங்களில் அரசு வழங்கும் ரூ.12,000 மானியத்தில் வேறு வழியின்றி சுமார் 70 சதவீத வீடுகளில் தனி நபர் இல்லக் கழிப்பறைகள் கட்டப்பட்டன.
இருப்பினும் மக்கள் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதில்லை. அதற்கு மாறாக பழைய பொருட்கள் போடும் குடோன்களாக அவற்றை பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றிய அரசின் கட்டாயத்தில் கழிப்பறை கட்டியுள்ளதால், மக்கள் கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு தொடங்க வேண்டும்.
இதுகுறித்து திருச்சுழியை சேர்ந்த சீனிவாசகன் கூறுகையில், தனிக்கழிப்பறை கட்டுவதற்கு குறைந்தளவு மானியத்தை ஒன்றிய அரசு ஒதுக்குகிறது. இம்மானியத்தை வைத்து தரமான முறையில் ஒரு கழிப்பறையை கட்டிமுடிக்க முடியாது. மேலும் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களிலுள்ள ஒட்டுமொத்த மக்களும் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தக்கின்றனர். திறந்த வெளி கழிப்பறை பயன்படுத்தும் மக்களுக்கு என அந்தந்த மாவட்ட மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.
இப்போது கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் உள்ள தனி நபர் இல்லக் கழிப்பறைகளுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். இதற்காக இலவசமாக தண்ணீர் டேங்க், கூடுதல் எண்ணிக்கையில் பொது குடிநீர் குழாய் இணைப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கிராமங்கள்தோறும் மக்கள்தொகைக்கு ஏற்ப பொது சுகாதார வளாகங்களை அமைத்துத் தர அரசு முன்வர வேண்டும். அவற்றை ஊராட்சி நிர்வாகங்கள் மூலம் பராமரிக்க வகை செய்ய வேண்டும். ஊரகப் பகுதிகளில் கழிப்பறையைப் பயன்படுத்துமாறு மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் அசோக் கூறும்போது, ஒன்றிய அரசு கொண்டு வந்தது நல்ல திட்டம் தான். ஆனால் கழிப்பறை கட்டுவதற்கு வெறும் 12 ஆயிரம் நிதி வழங்குகின்றனர். இந்த நிதியை வைத்து தரமான முறையில் கழிப்பறை கட்டப்படுவதில்லை. அவ்வாறு கட்டப்படும் கழிப்பறை பயன்படுத்த முடியாத நிலைக்கு விரைவில் சென்றுவிடுகிறது. தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப ஒரு தனிநபர் கழிப்பறை கட்டுவதற்கு குறைந்தபட்சமாக ரூ.50 ஆயிரம் வழங்கினால் மட்டுமே தரமான கட்டிடம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தும் நிலை ஏற்படும். மேலும் கிராமங்களில் கழிப்பறை இல்லாத வீடுகள் விவரம் அறிந்து தனிநபர் இல்லக் கழிப்பறை கட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
