×

புதுச்சேரியில் கவர்னர் தமிழிசை பெயரில் செல்போனில் போலி குறுந்தகவல் அனுப்பி பெண் அமைச்சரிடம் மோசடி முயற்சி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பிராந்தியத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரியங்கா. முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வருகிறார். இவரது செல்போனுக்கு அறிமுகம் இல்லாத புதிய நம்பரில் இருந்து கடந்த 30ம்தேதி ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்துள்ளது. அதிலுள்ள புரபைலில் கவர்னர் தமிழிசையின் படம் இடம்பெற்றிருந்த நிலையில் அவர் அனுப்பியதுபோல் குறுந்தகவல் இடம்பெற்றிருந்தன.

அந்த குறுந்தகவலில் அமேசான் கூப்பனை ரிசார்ஜ் செய்தால் சலுகைகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்ததால் அவருக்கு சந்தேகம் எழுந்தது. ஏற்கனவே புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனுக்கும், ஐஏஎஸ் அதிகாரி ஜவஹருக்கும் இதுபோன்று மோசடியாக கவர்னர் பெயரில் போலி குறுந்தகவல் அனுப்பி சிலர் பணமோசடியில் ஈடுபட முயன்ற சம்பவம் நடைபெற்றிருந்த நிலையில் உஷாரான அமைச்சர் உடனே கவர்னர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு இத்தகவலை தெரிவித்துள்ளார்.

அப்போது கவர்னர் தமிழிசை தரப்பிலிருந்து இதுபோன்று யாரும் குறுந்தகவல் அனுப்பவில்லை என்பதை உறுதிபடுத்தவே, உடனடியாக இவ்விவகாரம் தொடர்பாக விசாரித்து, போலி குறுந்தகவல் அனுப்பி பணம் பறிக்க முயன்ற ஆசாமி மீது நடவடிக்கை எடுக்குமாறு புதுச்சேரி சைபர் க்ரைம் காவல் நிலையத்துக்கு அமைச்சர் சந்திரபிரியங்கா தகவல் கொடுத்தார்.
 இதையடுத்து இன்ஸ்பெக்டர் மனோஜ் தலைமையிலான போலீசார் ேமாசடி பிரிவில்  வழக்குபதிந்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். பெண் அமைச்சருக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்ட செல்போன் நம்பரை கொண்டு அந்த நபரை அடையாளம் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Tags : Puducherry ,governor ,Tamil Nadu ,minister , Puducherry governor Tamilisai, fake SMS on cell phone, attempted fraud on female minister
× RELATED புதுச்சேரியில் உடல் பருமன்...